Published : 02 Jun 2020 11:48 AM
Last Updated : 02 Jun 2020 11:48 AM

உங்களால் ஆக்கபூர்வமாக எதுவும் செய்ய முடியவில்லை என்றால் வாயை மூடிக்கொண்டிருங்கள்- அதிபர் ட்ரம்ப் மீது போலீஸ் உயரதிகாரி பாய்ச்சல்

கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸாரால் கழுத்தில் கால் வைக்கப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் முழுவதும் பெரும் கலவரமாக மாறியுள்ளதையடுத்து, சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்தத் தவறிய மாநில ஆளுநர்களை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.

“நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு நானேதான் பொறுப்பு. மாநில ஆளுநர்கள் அமைதிைய நிலைநாட்டாமல் என்ன செய்கிறீர்கள்?அமைதியைக் கொண்டுவராவிட்டால், அமெரிக்க நகரங்களில் ஆயிரக்கணக்கில் ராணுவத்தை இறக்கிவிடுவேன்” என அதிபர் ட்ரம்ப் கடுமையாக மிரட்டும் தொனியில் பேசினார்.

மேலும் போராட்டத்தை ஒடுக்குவதில் நாம் பலவீனமாக இருக்கிறோமா என்று கேட்டார் ட்ரம்ப்.

மேலும் இது ஆதிக்கம் செலுத்த வேண்டிய காலக்கட்டம், என்று பேசியது குறித்து ஹூஸ்டன் போலீஸ் உயரதிகாரி ஆர்ட் அசிவீடோவிடம் சிஎன்என் தொலைக்காட்சியில் கேட்ட போது கடுமையாக அவர் பதிலளித்தார்:

“இந்த நாட்டின் உயர் போலீஸ் அதிகாரியாகக் கேட்டுக் கொள்கிறேன் அதிபர் ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்ய முடியாவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்கவும். ஏனெனில் நாட்டின் இளம் வயதினரை, 20 வயதுகளில் இருக்கும் ஆண் மற்றும் பெண்களை சிக்கலில் வைத்துள்ளோம்.

இப்போது ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெறும் காலம் அல்ல, இது மக்கள் இதயங்களையும் மனங்களையும் வென்றெடுக்க வேண்டிய காலம். ஒன்றில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம், அன்பு அல்லது நேயம் என்பதை பலவீனம் என்று கூறி மக்களை நாங்கள் குழப்ப விரும்பவில்லை. பல மக்கள் உடைமைகளை இழந்துள்ளார்கள், பலர் காயமடைந்துள்ளனர், இந்த நேரத்தில் பலப்பிரயோகம் செய்யச்சொல்வது தலைமைத்துவத்தின் அடிப்படைகளுக்கு முரணானது, இப்போது நமக்கு தலைமைதான் தேவை.

இது ஹாலிவுட் அல்ல இது நிஜ வாழ்க்கை. அமெரிக்க மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் தயவுகூர்ந்து போலீஸுடன் இணையுங்கள் என்ன செய்ய வேண்டுமோ நாம் இணைந்து நின்று செய்வோம். நிறைய பேர் ரத்தம் சிந்துகின்றனர், சொத்துக்களை அழிக்கின்றனர், இவர்கள் வோட்டுக்கள் பற்றி கவலைப்படவில்லை. எனவே அமைதி வழியில் பேரணி நடத்துங்கள். இது வெறும் போலீஸ் வேலையைச் செய்வதல்ல, இது சமூகம், சமத்துவமின்மை சம்பந்தப்பட்டது.

வெறுப்பை அடக்க ஒரே வழி அன்புதான் என்பதைப் புரிந்து கொள்வோம்” என்று சிஎன்என் பேட்டியில் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x