

இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் தற்போதைய சூழலை சீனா மிகத் தந்திரமாக தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
இந்தியா - சீனா எல்லை விவகாரத்தில் சீனாவின் செயல்பாடுகள் குறித்தும், தென்சீனக் கடல் வழித்தடம் தொடர்பாக அதன் நிலைப்பாடு குறித்தும் மைக் பாம்பியோவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறும்போது, “சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட காலமாக இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கையில் இறங்கி வருகிறது. அவர்கள் சூழலை மிகத் தந்திரமாக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தற்போது இந்திய எல்லை விவகாரத்திலும் சீனா அச்சுறுத்தும் விதமாகவே நடந்து வருகிறது. பிற நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அதன் ராணுவக் கட்டமைப்பை அதிபர் ஜி ஜின்பிங் உருவாக்கி வருகிறார்.
ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான எங்கள் ராணுவம், வலிமையான தேசப் பாதுகாப்புக் கட்டமைப்பு மூலம் அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறோம். அதேபோல் எங்கள் நட்பு நாடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறோம்.
சீனா மேற்கத்திய சிந்தனைகளை, அதன் ஜனநாயகப் பண்பை அழிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. அமெரிக்கர்களின் வேலைகளைப் பறித்தல், வர்த்தக வழித்தடத்தடமான தென்சீனக் கடல் வழியைப் பயன்படுத்த அனுமதி மறுத்தல் என சீனாவின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளின் பட்டியல் அதிகம்.
முதல் முறையாக சீனாவில் அச்சுறுத்தலை ஒடுக்கும் அதிபரை அமெரிக்கா தற்போது கொண்டிருக்கிறது. சீனா உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாகத் திகழ்கிறது. கரோனா வைரஸ் பரவல் ஏற்படத் தொடங்கிய சமயத்தில் தனது எல்லைகளை மூடிவிட்டு, தனது நாட்டினரை பிற நாடுகளுக்குப் பயணம் செல்ல அனுமதித்தது. அதனால்தான் மற்ற நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டது” என்று மைக் பாம்பியோ குற்றம் சாட்டினார்.
கரோனா தொடர்பான உண்மை நிலையை சீனா மறைத்து வருவதாக, அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.