Last Updated : 01 Jun, 2020 11:11 AM

 

Published : 01 Jun 2020 11:11 AM
Last Updated : 01 Jun 2020 11:11 AM

கறுப்பரின ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்ட விவகாரம்: வெள்ளை மாளிகை அருகே தீ வைப்பு; கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி போராட்டக்காரர்கள் கலைப்பு

கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸாரால் கழுத்தில் கால் வைக்கப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் விஸ்வரூபமெடுத்துள்ளது. கடந்த 3 நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் நேற்று வெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்கள் தீவைத்து வன்முறையில் ஈடுபட்டதால், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போலீஸார் கூட்டத்தைக் கலைத்தனர்.

அமெரிக்காவின் மினியாபோலீஸ் மாநிலம் மின்னசோட்டா நகர போலீஸ் அதிகாரி டேரிக் சாவின், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரைக் கையில் விலங்கு பூட்டி, கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்திருந்தார்.

போலீஸ் அதிகாரி டேரிக் சாவின், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட்

தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று ஜார்ஜ் கூறிய பின்பும், டேரிக் சாவின் தொடர்ந்து அவரின் கழுத்தை மிதித்ததால் ஜார்ஜ் உயிரிழந்தார். இந்தக் காட்சியின் வீடியோ உலகம் முழுவதும் வைரலானது. ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவின் கறுப்பின மக்களைத் தட்டி எழுப்பிவிட்டது. கடந்த திங்கள்கிழமை இச்சம்பவம் நடந்தது.

இந்தச் சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியதையடுத்து, போலீஸ் அதிகாரி டேரிக் சாவின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறிகளுக்கு எதிராக இந்தச் சம்பவத்தைப் பார்த்து மக்கள் கொதித்தெழுந்தனர். மினியாபோலீஸில் தொடங்கிய ஆர்ப்பாட்டம், நியூயார்க், துல்சா, லாஸ் ஏஞ்சல்ஸ், பிலடெல்பியா, வாஷிங்டன், ஓக்லஹோமா ஆகிய இடங்களிலும் பரவியது.

கழுத்தில் கால் வைத்து நெரித்த போலீஸ் அதிகாரி

மக்கள் வீதிகளில் இறங்கி அமைதியாகப் போராடிய நிலையில் கடந்த இரு நாட்களாக வன்முறையில் ஈடுபட்டு போலீஸ் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டன.

மினியாபோலீஸில் வன்முறை வெடித்து ஆங்காங்கே கடைகள் சூறையாடப்பட்டன. கட்டிடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் உடைத்து எறியப்பட்டு கண்ணாடிச் சில்லுகள் சாலைகள் முழுவதும் சிதறிக்கிடந்தன.

இந்தப் போராட்டம் நேற்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே இருக்கும் ஸ்மால்பார்க் பகுதியில் நடந்தது. வெள்ளை மாளிகை பகுதியில் போராட்டக்காரர்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. சிலர் சாலையில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகைகள், பிளாஸ்டிக் தடுப்புகளுக்கு தீவைத்து ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டனர். சிலர் அப்பகுதியில் இருந்த அமெரிக்க தேசியக்கொடியைப் பிடுங்கி தீயில் எறிந்தனர். அந்தப் பகுதியே திடீரென போர்க்களம் போல் ஆகியது.

இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் மோதல் வெடித்து இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அந்தப் பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வகையில் போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளையும், பெப்பர் ஸ்ப்ரேவையும் அடித்து கூட்டத்தினரைக் கலைத்தனர்.

அந்தப் போராட்டத்தில் ஈடுட்ட 31 வயது நிரம்பிய முனா அப்தி நிருபர்களிடம் கூறுகையில், “நாங்கள் கறுப்பினத்தவர்களின் பிள்ளைகள், கறுப்பினத்தவர்களின் சகோதரர்கள். நாங்கள் எதற்காகஉயிரிழக்க வேண்டும்.

இதுபோன்று நடப்பதால் நாங்கள் சோர்வடையமாட்டோம். அந்தச் சோர்வு இந்தத் தலைமுறைக்கு இல்லை. நாங்கள் அடக்குமுறைக்கு மட்டும் சோர்வடைகிறோம்” எனத் தெரிவித்தார்.

இதனால் வெள்ளை மாளிகைக்கு அருகே ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களை வரவிடாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x