

பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் வரும் ஜூன் 4-ம் தேதி காணொலி வழியாக உரையாட உள்ளனர். இந்நிலையில், ஸ்காட் மோரிசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியதாவது:
சமோசா மற்றும் மாம்பழ சட்னி அனைத்தும் புதிதாக தயாரிக்கப்படு கின்றன. இந்த வாரம் காணொலி வழி யாக உரையாட இருப்பதால் பிரதமர் மோடியுடன் சமோசாக்களை பகிர்ந்து கொள்ள முடியாததில் சிறிது வருத்தம் உள்ளது. அவர்கள் சைவ உணவு உண் பவர்கள். எனவே அவருடன் இவற்றை பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஆஸ்தி ரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக அவரது பயணம் மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்று காரணமாக இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பும் தள்ளிப்போனது. இந்நிலையில், பிரதமர் மோடி முதல் முறையாக ஜூன் 4-ம் தேதி ஸ்காட் மோரிசனுடன் காணொலி வழியாக ஆலோசனை நடத்துகிறார்.
கரோனா வைரஸ் பிரச்சினையில் சீனா, ஆஸ்திரேலியா இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் இந்தியா - ஆஸ்திரேலிய நாட்டுத் தலைவர்கள் காணொலி வழியாக பேசவுள்ளனர். இதனிடையே ஸ்காட் மோரிசன், இந்திய நாடு தங்களது இயற்கையான நண்பன் என குறிப்பிட்டார். இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.