யுஏஇ-யில் பல  வியாபாரிகளைக் கோடிக்கணக்கில் மோசடி செய்து ஏமாற்றிய இந்திய தொழிலதிபர்: வந்தே பாரத் திட்டத்தில் ஹைதராபாத்துக்கு ‘எஸ்கேப்’

யுஏஇ-யில் பல  வியாபாரிகளைக் கோடிக்கணக்கில் மோசடி செய்து ஏமாற்றிய இந்திய தொழிலதிபர்: வந்தே பாரத் திட்டத்தில் ஹைதராபாத்துக்கு ‘எஸ்கேப்’
Updated on
2 min read

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல வர்த்தகர்களை மோசடி செய்து பல கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஏமாற்றி வாங்கி எதற்கும் பணம் கொடுக்காமல் வெற்றுகாசோலையை கொடுத்ததாகப் புகார் எழுந்த இந்தியத் தொழிலதிபர் ஒருவர் கரோனா வைரஸ் காலக்கட்டத்தில் அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் வந்தேபாரத் திட்டத்தின் கீழ் விமானத்தில் ஹைதராபாத்திற்கு எஸ்கேப் ஆகி வந்தது பரபரப்பாகியுள்ளது.

வரும் போது சும்மா வராமல் அங்கிருந்து மாட்டிறைச்சி, சீஸ், பேரிச்சம் பழங்கள், முகக்கவசம் உள்ளிட்ட 6 மில்லியன் திர்ஹாம் மதிப்புடைய பொருட்களையும் எடுத்து வந்து விட்டதாக அவர் மீது கடும் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக கல்ஃப் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் 36 வயதுடைய இந்தியர் யோகேஷ் அசோக் யாரியவா என்பவர் ராயல் லக் ஃபுட்ஸ்டஃப் ட்ரேடிங் உரிமையாளர் ஆவார். இவர் மீது மோசடிக் குற்றச்சாட்டு உள்ள நிலையில் அபுதாபியிலிருந்து மே 11ம் தேதி வந்தே பாரத் மிஷன் விமானத்தைப் பிடித்து ஹைதராபாத் வந்து சேர்ந்தார். மே 25ம் தேதி வரை கட்டாயத் தனிமையிலும் இருந்தார்.

இவர் தன் வர்த்தத்தகம் என்ற பெயரில் பல வியாபாரிகளிடமிருந்து பெரிய அளவில் கொள்முதல் செய்து ஏமாற்றியுள்ளார், அதாவது பெரிய அளவில் கொள்முதல் செய்ததில் முகக்கவசங்கள், கைக்கிருமி நாசினிகள், மருத்துவக் கையுறைகள் ஆகியவை யுஏஇ பணமதிப்புக்கு 50 லட்சம் திர்ஹாம்கள் உடையதாகும். பலருக்கும் பின் தேதியிட்ட காசோலைகளைக் கொடுத்துள்ளார், அவை அனைத்தும் பணமின்றி திரும்பி வந்த போதுதான் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இவர் மோசடி செய்து கொள்முதல் செய்த நிறுவனங்கள் ஸ்கைடெண்ட் மருத்துவ உபகரண நிறுவனம், ரஹீக் லெபாரட்டரீஸ், ஜிஎஸ்ஏ ஸ்டார், அல் பராகா ஃபுட்ஸ், அல் அஹ்பாப் ஜெனரல் ட்ரேடிங், அமீரக ஜீரக தொழிற்சாலை ஆகியவை இவர் மோசடி செய்து பெரிய அளவில் கொள்முதல் செய்து ஏமாற்றிய வியாபார நிறுவனங்களாகும் இன்னும் மோசடி பட்டியல் நீளமானது. இப்போதுதான் இவர் ஏமாற்றிய பொருட்களின் பட்டியல் பெரிய அளவில் வெளியே வரத்தொடங்கி இன்னும் நிறைய பேர் புகார் அளித்து வருகின்றனர்.

இவர்கள் புர் துபாய் காவல்நிலையத்தில் மோசடி நபர் யோகேஷ் அசோக் மீது புகார் அளித்துள்ளனர். காசோலைகள் பணமின்றி திரும்பி வந்தவுடன் இவர்கள் அனைவரும் ராயல் லக் ஓபல் டவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது, யோகேஷ் அசோக் நிறுவனத்தில் பணியாற்றிய 18 ஊழியர்களும் மாயமாகினர். இவர் பொருட்கள் வைத்துள்ள குடோன்களைப் பார்த்தால் காலியாக இருந்துள்ளது.

இனிக்க இனிக்க பேசி கொள்முதல் செய்த பர்சேஸ் மேனேஜரை தொடர்பு கொள்ள இவர்கள் முயற்சி செய்த போது அவர் அழைப்பை ஏற்கவில்லை.

இந்நிலையில் எப்படியோ வந்தேபாரத் மிஷனில் தப்பி வந்த இந்தியர் யோகேஷ் அசோக்கினால் ஏற்பட்ட நஷ்டங்களை எப்படி ஈடுகட்டப்போகிறோம் என்று தெரியாமல் அந்த வியாபாரிகள் திக்குமுக்காடிப் போயுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in