Last Updated : 31 May, 2020 08:44 AM

 

Published : 31 May 2020 08:44 AM
Last Updated : 31 May 2020 08:44 AM

இந்தியாவும் வர வேண்டும் ; ஜி 7 நாடுகள் மாநாட்டை ஒத்திவைக்கிறேன்: அதிபர் ட்ரம்ப் திடீர் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி : கோப்புப்படம்

வாஷிங்டன்

ஜூன் மாதம் இறுதியில் நடக்கும் ஜி-7 நாடுகள் மாநாட்டை நான் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கிறேன், இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளும் அழைக்கப்பட வேண்டும் என அமெரிக்கஅதிபர் ட்ரம்ப் திடீரென அறிவித்தார்

ஜி-7 நாடுகள் கூட்டமைப்பில் உலகின் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட, வளர்ச்சியடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரி்ட்டன், கனடா ஆகிய நாடுகள் மட்டும் பங்கேற்கும் மாநாடாகும். இந்த நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கலந்து பேசி பொருளாதார பிரச்சினைகளை, வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்களை பேசித்தீர்த்துக்கொள்வார்கள்.

இந்த ஆண்டு ஜி-7 நாடுகள் மாநாட்டை அமெரிக்கா நடத்துகிறது. ஜி-7 மாநாட்டின் தலைவரான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓரிரு நாடுகளின் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களை அழைக்க முடியும். கடந்த ஆண்டு பிரான்ஸில் நடந்த ஜி-7 மாநாட்டில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்

இந்த சூழலில் ஜி-7 நாடுகள் மாநாடு ஜூன் 10-12 வரை அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜூன் மாத இறுதிக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்த சூழலில் அந்த மாநாட்டை செப்டம்பரில் மாற்றி அதிபர் ட்ரம்ப் அதிரடியாக முடிவு செய்துள்ளார்.

ப்ளோரிடாவில் ஸ்ேபஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் விண்வெளிக்கு செல்லும் நிகழ்வை பார்த்துவிட்டு வாஷிங்டனுக்கு விமானத்தில் அதிபர் ட்ரம்ப் திரும்பினார். அப்போது அதிபர் ட்ரம்ப் நிருபர்களிடம் கூறுகையில் “ ஜுன் இறுதியில் நடத்த தி்ட்டமிட்டிருந்த ஜி-7 நாடுகள் மாநாட்டை செப்டம்பர் மாதம்வரை ஒத்திவைக்கிறேன். இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, தென் கொரியா, ஆஸ்திரேலியா நாடுகளின் தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளேன்

ஜி-7 நாடுகள் மாநாடு என்பது, உலகில் என்ன நடக்கிறது என்பதை முறைப்படி வெளி்ப்படுத்தும் மாநாடாக இல்லை என நான் நினைக்கிறேன். காலாவதியான நாடுகளைக் கொண்ட மாநாடு போல் இருக்கிறது” எனத் தெரிவித்தார்

வெள்ளை மாளிகையின் தகவல்தொடர்பு இயக்குநர் அலிசா அலெக்சான்ட்ரா பாரா கூறுகையில் “ ஜி-7 நாடுகள் மாநாட்டில் பாரம்பரிய உறுப்புநாடுகள், நட்பு நாடுகளும் அழைக்கப்படும். சீனாவுடன் எதிர்காலத்தில் எவ்வாறு அணுகுவது குறித்து பேசப்படும்” எனத் தெரிவித்தார்

இதற்கிடையே கரோனா வைரஸ் தொற்று குறையாத பட்சத்தில் , ஜி-7 மாநாட்டில் பங்ேகற்கமாட்டேன் என ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் நேற்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x