Published : 30 May 2020 06:30 AM
Last Updated : 30 May 2020 06:30 AM

அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட பதிவை நீக்கியது ட்விட்டர்- சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் மினியாபோலிஸ் பகுதியில், மோசடி வழக்கில் சந்தேகத்தின் பேரில் கருப்பு இனத்தவர் ஒருவரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். அந்த நபரை போலீஸார் ஒருவர்காலால் அழுத்தி பிடித்து கைகளில் விலங்கு மாட்டும் போது மூச்சுத்திணறி இறந்துவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அப்பாவியான பட்டதாரி ஒருவரை கருப்பினத்தவர் என்றகாரணத்தால் மோசடி வழக்கில் சிக்க வைக்க போலீஸார் முயன்றது பொது மக்களிடையே பெரும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த அதிபர் டொனால்டுட்ரம்ப், நீதிக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை ‘குண்டர்கள்’ என்று விமர்சித்தார். மேலும் போராட்டத்தைக் காரணம் காட்டி பொதுமக்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதாக தகவல் வெளியானால், துப்பாக்கிச் சூடு தொடங்கப்படும். தேசிய பாதுகாப்புப் படையும் அனுப்பப்படும் என்றும் ட்விட்டரில் ட்ரம்ப் தெரிவித்தார்.

அதிபரின் கருத்து வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி ட்விட்டர் நிர்வாகம், அவரது கருத்தை பக்கத்தில் இருந்துநீக்கிவிட்டது. இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, உண்மையை கூறும்குரல்களை சமூக வலைதளங்கள் சில அடக்கி வைக்கின்றன. இதனை சரி செய்யா விட்டால் அவற்றை முழுவதுமாக மூட நேரிடும் என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

அதன்படி வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் சமூக வலைதளங்களின் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவில் நேற்று அதிபர் ட்ரப்ப் கையெழுத்திட்டார். இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பும் சட்டரீதியான பிரச்சினைகளும் ஏற்படும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x