ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு ட்ரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் : வெள்ளை மாளிகை அதிகாரிகள்

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு ட்ரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் : வெள்ளை மாளிகை அதிகாரிகள்
Updated on
1 min read

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் என்று வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலேரிய தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கரோனாவை தடுப்பதற்கும் பயன்படுத்த முடியும் என்று ட்ரம்ப் கூறிவந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக அம்மருந்தை உட்கொண்டு வந்தார். இந்நிலையில் அம்மருந்தை உட்கொண்ட பிறகு அவர் உடல் ரீதியாக ஆரோக்கியமாக உணர்வதாக வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1946-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், மலேரியா தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்று தீவிரமடைந்து வந்த நிலையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கரோனாவைத் தடுக்க உதவும் என்ற வாதத்தை ட்ரம்ப் முன்வைத்தார்.

அதைத் தொடர்ந்து இந்தியா அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார். இந்தியாவும் அனுப்பி வைத்தது. ஆனால், சில ஆய்வுகளில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கரோனா தொற்றைத் தடுக்காது என்றும், மாறாக இதயப் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.

இருந்தபோதிலும், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கரோனாவைத் தடுக்கும் என்று ட்ரம்ப், பிரேசில் பிரதமர் போல்சானரோ உள்ளிட அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். அது தொடர்பான ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவில் உள்ள ஹென்றி போர்டு மருத்துவமனையில் 3000 சுகாதரப் பணியாளர்கள் பரிசோதனைக்காக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை உட்கொண்டு வருவதாகவும், அது எதிர்பார்த்த பலனை அளிப்பதாகவும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு செயலர் மெக்கெனானி தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கரோனாவுக்கு அதிகாரப்பூர்வமான தடுப்பு மருந்து உருவாக்கப்படவில்லை. கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் மருத்துவ அறிவியலாளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் கரோனா தொடர்பாக உருவாக்கியுள்ள தடுப்பு மருந்தை மனிதர்கள் உடலில் செலுத்தி பரிசோதித்து வருகிறது. செப்டம்பர் மாதத்துக்குள் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்று அப்பல்கலைகழகம் உறுதி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in