

தவறான தகவல்களை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாக ட்விட்டர் தளம் அம்பலப்படுத்தியதையடுத்து ட்ரம்ப் ட்விட்டர் தளத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.
கரோனா பாதிப்பு சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல்கள் வருகின்றன, அதில் மின்னஞ்சல் வாக்குசெலுத்துதல் முறையைக் கடைப்பிடிக்க ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியது.
இதற்கு அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்த போது இந்த வாக்குப்பதிவு நடைமுறையினால் மோசடி நடக்கும் என்று பதிவிட்டார். இன்னொரு பதிவையும் ட்ரம்ப் வெளியிட்டார்.
அதற்கு ட்விட்டர் தளம், ட்ரம்ப் வெளியிட்ட இந்தப் பதிவு தவறானது என்று போட்டு உடைத்தது.
இந்நிலையில் எங்கள் குரல்களை சமூக ஊடகங்கள் முடக்கப் பார்க்கிறது. 2016 அதிபர் தேர்தலிலும் அவை இதே முயற்சியில் ஈடுபட்டன, ஆனால் தோல்வியைச் சந்தித்தன. இ-மெயில் மூலம் வாக்களிப்பை எப்படி ஏற்றுக் கொள்ள முடியாதோ, அதே போல் இவர்களின் முயற்சிகளையும் அனுமதிக்க முடியாது. இ-மெயிலில் தேர்தல் நடந்தா அதிக மோசடி செய்பவரே வெற்றி பெறுவார் அதேபோல் சமூக ஊடகங்களும் தற்போது செயல்படுகின்றன. உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள் என்று ட்ரம்ப் எச்சரித்தார்.
“சமூக ஊடகங்கள் தொடர்பான உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திடவுள்ளார்” என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கெய்லி மூக் தெரிவித்துள்ளார்.
ஆனால் யேல் பல்கலைக் கழக பேராசிரியர் ஜாக் பால்கின், ‘இது சாதாரண விஷயமல்ல. நாடாளுமன்றத்தின் அனுமதியில்லாமல் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த முடியாது. கடும் சட்டச் சவால்களையும் சந்திக்க வேண்டி வரும்’ என்றார்.
ட்விட்டர் அடிபணிய மறுப்பு:
அதிபர் ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு அடிபணிய மறுக்கும் ட்விட்டர் தள தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்ஸி கூறும்போது, “ட்விட்டர் தளத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் பொறுப்பாளி ஒருவர் இருக்கிறார் என்றால் அது நான் தான். ஆகவே தயவு செய்து இந்தப் பிரச்சினைக்குள் எங்கள் ஊழியர்களை இழுக்க வேண்டாம்.
அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுதும் தேர்தல் குறித்த தவறான தகவல்கள் எங்கு வெளியானாலும் நாங்கள் தவறை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம். நாங்கள் தவறு செய்தாலும் சுட்டுக்காட்டுங்கள், ஏற்றுக் கொள்கிறோம்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.