

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ட்விட்டர் அரசியல் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
ட்ரம்ப் நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இரண்டு பதிவுகளை ட்விட்டர் நிர்வாகம் தவறான செய்தி என்று குறிப்பிட்டிருந்தது. அதை தொடர்ந்தே ட்விட்டர் நிறுவனம் மீது ட்ரம்ப் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது கரோனா வைரஸ் காரணமாக மக்கள் பொது வெளியில் நடமாடுவதை குறைத்து வருகிற நிலையில், கலிஃபோர்னியா மாகாண மக்கள் வரும் பொதுத் தேர்தலில் தபால் வாக்குசீட்டு மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்துகொள்ளலாம் என்று அம்மாகாண ஆளுநர் அறிவித்தார்.
வாக்கு உரிமை பெற்றவர்களுக்கு வாக்குச்சீட்டு அனுப்பி வைக்கவும் மே 8-ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில் டிரம்ப் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கலிஃபோர்னியா ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்தார்.
கலிஃபோர்னியா அரசு, அமெரிக்க குடிமக்கள் இல்லாதவர்களுக்கும் வாக்குச் சீட்டு வழங்குகிறது என்று குற்றம்சாட்டினார்.
ட்ரம்ப் குற்றச்சாட்டை ஆய்வு செய்த சிஎன்என் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய இரு செய்தி நிறுவனங்கள் டிரம்ப் குற்றச்சாட்டு ஆதரமற்றது என்று செய்தி வெளியிட்டு ஆதாரம் காட்டின.
இந்நிலையில் வாக்குச்சீட்டு தொடர்பாக ட்ரம்ப் பதிவிட்ட இருபதிவுகளை ட்விட்டர் நிர்வாகம் தவறானது என்று அடையாளப்படுத்தியது. அதைதொடர்ந்தே ட்விட்டர் 2020 பொது தேர்தலில் தலையிடுகிறது என்று ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், ”தபால் வாக்குச் சீட்டு தொடர்பாக கூறிய கருத்துகளை, அதாவது தபால் வாக்குச்சீட்டில் மோசடிகள் நிகழும் என்று நான் கூறிய கருத்துகளை தவறான தகவல் என்று போலி செய்திகளை வழங்கும் நிறுவனங்களான சிஎன்என் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் கூறியதை அடிப்படையாக கொண்டு, ட்விட்டர் என் பதிவுகளை தவறானது என்று அடையாளப்படுத்தியுள்ளது. பொதுத் தேர்தல் தொடர்பான விஷயங்களில் ட்விட்டர் தேவையில்லாமல் தலையிடுகிறது. மட்டுமல்லாமல், ட்விட்டர் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கிறது. ஒரு அதிபராக நான் அதை அனுமதிக்க முடியாது’”என்று கூறியுள்ளார்.
ட்ரம்புக்கு ட்விட்டர் தரப்பில் பதிலும் அளித்துள்ளது.
இதுதொடர்பாக ட்விட்டர் தரப்பில் கூறியதாவது, ”ட்ரம்பின் பதிவுகள் ட்விட்டரின் விதிமுறைகளை மீறுவதாக இல்லை. ஆனால் அவர் கூறிய கருத்துக்கள் தொடர்பான உண்மையான தகவல்களை வழங்குவதன் பொருட்டே அவரது பதிவுகள் தவறானவை என்று அடையாளப்படுத்தப்படன” என்று தெரிவித்துள்ளது.