வூஹானில் 12 நாட்களில் 6.68 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை

வூஹானில் 12 நாட்களில் 6.68 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை
Updated on
1 min read

வூஹானில் கடந்த 12 நாட்களில் மட்டும் 6.68 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரு வாரங்களுக்கு முன்பாக வூஹானில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்நகரில் உள்ள 1 கோடி மக்களையும் அடுத்த 10 தினங்களுக்குள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்போவதாக வூஹான் நகர அரசு அறிவித்தது.

இந்நிலையில் 12 நாட்களில் 6.68 லட்சம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 206 பேருக்கு அறிகுறி எதுவும் வெளிப்படாமல் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதன்முதலாக கரோனா தொற்று சீனாவில் உள்ள வூஹானில் கடந்த டிசம்பர் மாதம் உறுதி செய்யப்பட்டது. சில நாட்களில் கரோனா தொற்று மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வூஹான் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது. 76 தினங்களுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்டது. ஒரு மாதத்துக்கும் மேலாக புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில் இம்மாதம் 10, 11 தேதிகளில் ஒரே குடியிருப்பில் உள்ள 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கரோனா பரவல் இரண்டாம் கட்டத்தை எட்டுவதைத் தடுக்கும் நோக்கில் அந்நகரில் உள்ள 1 கோடிக்கு மேற்பட்ட மக்களையும் முழு பரிசோதனைக்கு உட்படுத்த அந்நகர அரசு திட்டமிட்டது.

அதன்படி கடந்த 12 நாட்களில் 6.68 லட்சம் பேருக்கு நியூக்லிக் ஆசிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மே 23-ம் தேதி அன்று மட்டும் ஒரே நாளில் 11 லட்சம் பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இந்தக் கட்டாயப் பரிசோதனை அறிவிப்புக்கு முன்னரே வூஹானில் உள்ள நிறுவனங்கள் அதன் ஊழியர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் இதுவரையில் 82,993 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 78,280 பேர் குணமாகியுள்ளனர். 4,634 பேர் பலியாகியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in