

கரோனா வைரஸ் பரவல் காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், காலவதியான சுற்றுலா விசாக்களுக்கான கால கெடுவை கூடுதலாக மூன்று மாதங்களுக்கு சவுதி அரசு நீடித்துள்ளது.
சுற்றுலா விசாவுக்கான கால அவகாசம் தானகவே நீட்டிக்கப்படும் என்றும், இதற்கென்று பாஸ்போர்ட் அலுவலகம் செல்லத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகின்றனர். சுற்றுலாவுக்கு மட்டுமின்றி வேலை தேடுவதற்காகவும், உறவினர்களை சந்திப்பதற்காகவும் சுற்றுலா விசா மூலம் சவூதி செல்வதும் உண்டு.
இந்நிலையில் கரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் பெரும்பாலான நாடுகள் தங்கள் எல்லைகளை மூடின. சவூதி அரேபியா மார்ச் மாதத்தில் தனது விமான நிலையத்தை மூடியது.
இதனால் சுற்றுலா விசாவில் சவூதிக்கு சென்றவர்கள் விசாவுக்கான காலக்கெடு முடிந்தும் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விமானப் போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில் காலவதியான விசாக்களுக்கு மூன்று மாதம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இத்னைத் சவூதிக்கு சுற்றுலா விசாவில் சென்றவர்கள் கூடுதலாக மூன்று மாதம் சவூதியில் தங்கி கொள்ளலாம்.
சவூதியில் பணி புரியும் வெளிநாட்டினர்களுக்கான விசா காலக்கெடு சென்ற மாதம் நீட்டிக்கப்பட்டது. பிப்ரவரி 25 முதல் மே 24 வரையிலான காலகட்டத்தில் காலாவதியாகும் பணி சூழல் காரணமாக சவூதியில் வசித்து வருபவர்களுக்கான விசாக்களுக்கு சென்ற மாதம் கூடுதலாக மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சுற்றுலா விசாக்களுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் இது வரையில் 76,726 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 48,450 பேர் குணமாகியுள்ளனர். 411 பேர் பலியாகியுள்ளனர்.