

ஈரானில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மசூதிகள் திறக்கப்பட்டுள்ளன.
ஈரானில் ஷா அப்துல் அசிம் மசூதி தற்போது திறக்கப்பட்ட நிலையில் வழிபாட்டாளர்கள் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் அதிகாலை தொழுகையில் ஈடுபட்டதாக ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது.
இத்துடன் ஈரானின் வடக்குப் பகுதியில் உள்ள இமாம் ரெசா மசூதியும், பாத்திமா மசூதியும் திறக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,032 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 34 பேர் பலியாகி உள்ளனர்.
ஈரானில் இதுவரை சுமார் 1,37,724, பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,07,713 பேர் குணமான நிலையில் 7,451 பேர் பலியாகி உள்ளனர்.
மார்ச் மாதம் ஈரானில் கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் பள்ளிகள், பல்கலைகழகங்கள், வணிக நிறுவனங்களுடன் மசூதிகளும் மூடப்பட்டன இந்த நிலையில் மசூதிகள் திறக்கப்பட்டுள்ளன.
ஈரானில் சமீப காலமாக பலுசிஸ்தான், சிஸ்டன் பகுதிகளில் கரோனா பரவல் அதிகமாகி வருகிறது. இதன் காரணமாகவே தற்போது தொற்று அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று அதிகமானதைத் தொடர்ந்து ஈரானின் கிழக்குப் பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா தொற்றால் ஈரான் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஈரானில் பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கிய கரோனா மார்ச் மாதம் தீவிரத்தை அடைந்தது.