

கரோனா தொற்றால் உலக நாடுகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில் மோசமான இந்தச் சூழல் விரைவில் கடந்து செல்லும் என்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் தீவிரமாக இருக்கும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து ரமலான் பண்டிகையைக் கொண்டாடினர்.
கரோன தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய கிழக்கு நாடுகளிலும், ரமலான் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், தனது மூத்த அதிகாரிகளுடனான வீடியோ நேர்காணலில் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் சவுதி இளவரசர் முகமது சல்மான் பேசும்போது,“ இந்த ரமலானில் என்னுடைய வலி என்னவென்றால் நான் உங்களுடன் இல்லை என்பதுதான். இல்லத்தில் இருந்துகொண்டும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் ரமலான் பண்டிகையைக் கொண்டாடியதற்காக நான் உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். மோசமான (கரோனா வைரஸ்) இந்தச் சூழல் விரைவில் கடந்து செல்லும். நல்லதை நோக்கி நாம் சென்றுகொண்டு இருக்கிறோம” என்று கூறியுள்ளார்.
.
சவுதியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அங்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் இதுவரை 72,560 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 43,520 பேர் குணமடைந்த நிலையில் 390 பேர் பலியாகி உள்ளனர்.