

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் ஜெசிந்தா தொடர்ந்து தனது நேர்காணலைத் தொடந்தார்.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், இன்று (திங்கட்கிழமை) வெலிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தவாறு, ரியான் பிரிட்ஜ் தொகுத்து வழங்கிய தொலைகாட்சி நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. (இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளது).
இதனைத் தொடர்ந்து ஜெசிந்தா தொகுப்பாளரிடம், ''நாடாளுமன்ற வளாகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது . நாம் இங்கு லேசான நிலநடுக்கத்தை உணர்ந்து இருக்கிறோம். என் பின்னால் பொருட்கள் நகர்கிறதா?'' என்று கேட்டார்.
பின்னர் அதிர்வுகள் நின்றதை உணர்ந்து நிலநடுக்கத்துக்கு மத்தியிலும் நேர்காணலை முழுமையாக முடித்தார் ஜெசிந்தா.
இந்த நிலையில் நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரை பெரிய அளவில் ஏதும் பாதிப்பில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூசிலாந்தில் கரோனா தொற்றைக் கவனமாகக் கையாண்டு கட்டுப்படுத்தியதற்காக உலகம் முழுவதும் பரவலாகப் பாராட்டப்பட்டார் ஜெசிந்தா.
நியூசிலாந்தில் கரோனாவால் 1,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,456 பேர் மீண்டுள்ள நிலையில் 21 பேர் பலியாகியுள்ளனர்.