

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 15,800 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 15,800 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,63,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 653 பேர் பலியாகியுள்ளனர். பிரேசிலில் தற்போது கரோனா தொற்றுக்கு 22,666 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் இதுவரை கரோனாவிலிருந்து 1,49,911 பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்து கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக பிரேசில் உள்ளது. அமெரிக்காவில் 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர், தென் அமெரிக்காவில் பல நாடுகள் குறித்துக் கவலையாக உள்ளது என்றும், தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில் கரோனா நோய்த் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. மேலும் ஜூன் வரை பிரேசிலில் கரோனா தொற்று அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா கரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக கடுமையான விமர்சனத்து உள்ளானார்.
உலகம் முழுவதும் கரோனா தொற்றால் 55,00,607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,46,721 பேர் குணமடைந்த நிலையில் 23,02,069 பேர் பலியாகியுள்ளனர்.