Published : 24 May 2020 02:34 PM
Last Updated : 24 May 2020 02:34 PM

இரவு பார்ட்டிகளால் அலறும் நாடுகள்!

கரோனா வைரஸ் தொற்றின் விஸ்வரூபப் பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வரும் முடக்கமும் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்துவிட வேண்டும் என்ற அவர்களது தவிப்பும் நாம் அறிந்ததே. இன்னும் சுற்றுலாவை முக்கியத் தொழிலாக நம்பியுள்ள நாடுகள் நீண்ட கால முடக்கத்தைப் பின்பற்ற முடியாத நிலை. இதனால், பகுதி பகுதியாக அல்லாமல், பெரும்பாலான தொழில் நடவடிக்கைகளை முடுக்கிவிடத் தொடங்கியுள்ள நாடுகளில் அருகருகேயுள்ள சுவிட்சர்லாந்தும் இத்தாலியும் முன்னால் நிற்கின்றன. அதேநேரம், வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்துடனேயே சில பொது நடவடிக்கைகளில் இறங்க வேண்டாம் என இவ்விரு நாடுகளும் கேட்டுக்கொண்டன. அவற்றில் இரவு பார்ட்டிகள், கம்யூனிட்டி பார்கள் ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டாம் எனக் கேட்டுகொள்ளப்பட்டது.

ஆனால், இந்த இரு நாடுகளுடன் ஊரடங்கு மெல்ல தளர்த்தப்பட்டு வரும் பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள இளைஞர்கள், இரவு பார்ட்டிகளில் கூடி கும்மியடிப்பது அரச நிர்வாகங்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. தமிழகத்தில் குடிநோய் எப்படி ஒரு கலாச்சாரமாக மாறி, குடையைப் பிடித்துக்கொண்டு வெயிலில் நின்று மது வாங்கிக் குடிக்கும் சமூகம் உருவாகிவிட்டதோ, அதேபோல, ஐரோப்பிய நாடுகளில் வெளியே சுற்றும் கலாச்சாரப் பழக்கத்தால் இளைஞர்கள் இரவு பார்ட்டிகள் மீது அதிக மோகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இப்படி பார்ட்டி மனோநிலையை தங்கள் சுதந்திரத்தின் முக்கியக் களமாக நினைக்கும் இளைஞர்களைக் கட்டுப்படுத்துவதில் சுவிட்சர்லாந்தும் இத்தாலியும் திணறி வருவதை அந்த நாடுகளில் கடந்த இரு நாட்களாக நடந்த சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவ்விரு நாடுகளிலும் பகலை விட காவல்துறை இரவில் அதிகம் பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

வீடுகளில் இரண்டரை மாத காலமாக முடங்கியிருந்து வெளியே வந்து சுதந்திரமாக சுற்றத் தொடங்கியிருக்கும் இளைஞர்கள், “கரோனா வைரஸ், அரசுகளால் தவறாகக் கையாளப்பட்ட விவகாரம், ஊடகங்களோ அதை ஊதிப் பெரிதாக்கிவிட்டன. அது சாதாரண காய்ச்சல்தான்” என்கிறார்கள். ஆனால், “கரோனா வைரஸை அவ்வளவு அலட்சியமாக எடுத்துக் கொள்ளதீர்கள். அதன் இரண்டாவது அலை எந்த விதத்தில் தனது ஆற்றலை வெளிப்படுத்தும், அது எவ்வாறு மனிதர்களிடம் தன்னை தகவமைத்துக் கொள்ளும் என்பதை மருத்துவ உலகத்தாலும் ஊகிக்க முடியாது” என்று தொற்றுநோய் நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x