

மலேசியபிரதமர் முகைதீன் யாசினின் அலுவலக சந்திப்பில் கலந்துகொண்ட அதிகாரி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரும் தற்போது 14 நாட்களுக்கு தனித்திருக்க உள்ளார்.
கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனையில் யாசினுக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இருந்தபோதிலும், பாதுகாப்பு கருதி அவர் 14 நாட்களுக்கு தனித்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக சிங்கப்பூரில் நாடளுமன்ற அமைச்சரவைக் கூட்ட சந்திப்பில் பிரதமர் முகைதீன் யாசின் தலைமை வகித்தார். அதில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவருக்கு கரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் பிரதமர் யாசினும், அக்கூட்டத்தில் கலந்துகொண்ட மற்ற உறுப்பினர்களும் அவரவர் வீடுகளில் 14 நாட்களுக்கு தனித்திருக்க உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தில் நடத்தப்படும் அனைத்துக் கூட்டங்களும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. முறையான சோதனை மேற்கொள்ளப்பட்ட உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்று மலேசியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் கரோனா நோய்த் தொற்று இன்னும் நீடித்து வருகிறது . இதில் சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது குணமடைந்து பணிக்குத் திரும்பியுள்ளார். ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷூஸ்டின் கடந்த மாதம் கரோனத் தொற்றுக்கு ஆளானார். அவரும் நோய்த் தொற்றிலிருந்து மீண்டு பணிக்குத் திரும்பியுள்ளார்.
மலேசியாவில் இன்று ஒருநாளில் 78 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அங்கு கரோனா தொற்றுக்கு பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7,137-ஆக அதிகரித்துள்ளது. அதில் 5,859 பேர் குணமாகியுள்ளனர். 115 பேர் உயிரிழந்துள்ளனர்.