

சீனாவிலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் விமர்சித்துள்ளார். ஆப்பிரிக்க - அமெரிக்கத் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட ட்ரம்ப் இதனைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “கரோனா வைரஸ் சீனாவிலிருந்துதான் வந்துள்ளது. அதுகுறித்து எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. நாங்கள் இதுகுறித்து எளிதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 51,97,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,34,680 பேர் பலியாகியுள்ளனர். இதில் அமெரிக்காவில் மட்டும் 16, 20,902 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 96,354 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தவறிவிட்டார் என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
சீனாவின் வூஹான் நகரில் உள்ள விலங்குகள் சந்தையிலிருந்து உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பரவியது என்று சீனா கூறி வருகிறது. ஆனால், கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா கூறி வருகிறது.
கரோனா வைரஸைக் கையாண்ட விதத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடக்கவில்லை. உலக நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருளாதார இழப்புக்கு சீனாதான் பொறுப்பேற்க வேண்டும். சீனாவிடம் இருந்து இழப்பீடு பெறுவற்காக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
ஆனால், எங்கள் மீது அமெரிக்கா தொடுக்கும் சட்ட நடவடிக்கையை ஏற்க முடியாது என்று சீனா கூறியுள்ளது.