Last Updated : 22 May, 2020 08:13 AM

 

Published : 22 May 2020 08:13 AM
Last Updated : 22 May 2020 08:13 AM

கரோனா விவகாரம்: சட்ட நடவடிக்கையை ஏற்கமாட்டோம்; பதிலடி கடுமையாக இருக்கும்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதற்கு சீனாதான் காரணம் எனக் குற்றம்சாட்டி, எங்கள் மீது அமெரிக்கா தொடுக்கும் சட்ட நடவடிக்கையை ஏற்க முடியாது. அவ்வாறு சட்டம் ஏதும் அமெரிக்கா கொண்டுவந்தால் எங்களின் பதிலடி கடுமையாக இருக்கும் என அமெரி்க்காவை சீனா எச்சரித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரின் விலங்குகள் சந்தையிலிருந்து உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பரவியது என்று சீனா கூறிவருகிறது. ஆனால், கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, கரோனா வைரஸைக் கையாண்ட விதத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடக்கவில்லை, உலக நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருளாதார இழப்புக்கு சீனாதான் பொறுப்பேற்க வேண்டும். ஆதலால், சீனாவிடம் இருந்து இழப்பீடு பெறுவற்காக சட்ட நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்கா கூறி வருகிறது

இந்நிலையில் சீன நாடாளுமன்றத்தின் செய்தித்தொடர்பாளர் ஹாங் யேசூயி நிருபர்களுக்கு நேற்றுப் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

சீன நாடாளுமன்றத்தின் செய்தித்தொடர்பாளர் ஹாங் யேசூயி

“ உலகில் கரோனா வைரஸ் பரவியதற்கும், அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவியதற்கும் சீனாதான் காரணம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இதற்காக அமெரிக்கா எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமி்ட்டிருப்பதையும் ஏற்க முடியாது. இது சர்வதேச உறவுகளின் விதிமுறைகளை மீறி சர்வதேச சட்டங்களை மீறி நடப்பதாகும்

அமெரிக்கா ஏதேனும் சட்டநடவடிக்கை எடுத்தாலோ அல்லது மசோதா கொண்டு வந்தாலோ அதை சீனா கடுமையாக எதி்்ர்ப்போம். அவ்வாறு அமெரிக்கா ஏதேனும் செய்தால் அதற்கு சீனா தரப்பில் கடும் பதிலடி நடவடிக்கைகள் இருக்கும்

அமெரிக்கா முதலில் மற்ற நாடுகள் மீது குற்றம்சாட்டுவதை நிறுத்த வேண்டும், தன்னுடைய நாட்டில் நிலவும் சொந்த பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும், சொந்த பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் அமெரிக்காவின் செயல் பொறுப்பானது அல்ல. அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையையும் ஏற்க மாட்டோம், இழப்பீடு கோருவதையும் ஏற்க முடியாது

கரோனா வைரஸைப் பொறுத்தவரை சீனா சிறப்பாகச் செயல்பட்டு வைரஸைக் கட்டுப்படுத்தியது. ஏராளமான தியாகங்களைச் செய்து கரோனா போரில் சீனா வென்றுள்ளது.

சீனாவில் கரோனா தொற்று ஏற்றப்பட்டதிலிருந்து உலகிற்கு வெளிப்படைத்தன்மையுடனே அனைத்து தகவல்களைும் சீனா தெரிவித்துவந்தது. உலக சுகாதார அமைப்புக்கும் அனைத்து தகவல்களையும் கூறினோம்,உலக நாடுகளுக்கும் சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்தோம்.

கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகங்களில் இருந்து பரவியது எனும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இது முழுமையாக அறிவியல் சார்ந்த விஷயம், அறிவியல் அறிஞர்கள், ஆய்வாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்து அவர்கள் முடிவு செய்யட்டும் இதை அவர்களிடம் விட்டுவிட்டு, நாம் கருத்துக்கள் கூறுவதை வி்ட்டுவிடுவோம்.

இவ்வாறு ஹாங் யேசூயி தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x