

லடாக் ஏரி அருகே இந்திய ராணுவம் சாலை அமைத்து வருவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவும், சீனாவும் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் நீளஎல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இதில் ஆரம்பம் முதலாகவேஅருணாச்சலப் பிரதேசத்தில் சீனா உரிமைக் கோரி வருகிறது.இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது லேசான மோதல் ஏற்படுவது வழக்கம்.
இதனிடையே, சிக்கிமில் உள்ள டோக்லாம் பகுதியை தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி அங்கு கடந்த 2017-ம் ஆண்டு தனது ராணுவ வீரர்களை சீனா நிறுத்த முற்பட்டது. அப்போது இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு பின்னர் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் உருவானது. இந்நிலையில், லடாக்ஏரியின் வடக்கே அமைந்துள்ள இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் இந்திய ராணுவம் சார்பில் தற்போது சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் சீனா, அது தங்களுக்கு சொந்தமான பகுதி எனக் கூறியுள்ளது. மேலும், அங்கு அதிகளவில் தனது ராணுவ வீரர்களையும் குவித்துள்ளது. இதன் காரணமாக, இரு நாடுகள் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சீனாவின் பாங்சாங் சோ பகுதியில் உள்ள ராணுவ கமாண்டர்களிடம் இந்திய ராணுவம் சார்பில் 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. எனினும், இதில்சுமூகமான முடிவு எட்டப்படவில்லை என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.