

கரோனாவுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் கரோனா தொற்று தீவிரமாக பரவ தொடங்கி இருக்கிறது. இதனை தடுப்பதற்கான பல்வேறு கட்ட முயற்சிகளை அந் நாட்டு பிரதமர் இம்ரான் கான் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் கரோனா வைரஸ் தொடர்பான நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட இம்ரான் கான் பேசும்போது, “ நாம் அனைவரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி கண்டறியும் வரை கரோனா வைரஸுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,091 ஆக அதிகரித்துள்ளது.
1,017 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இதுவரை பாகிஸ்தானில் 4,29,600 பேருக்கு கரோனா தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் அதிகப்படியான கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தில் 18,964 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் 6,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் வரும் ஜூன் மாதத்தில் கரோனா தொற்று அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.