Published : 21 May 2020 07:34 PM
Last Updated : 21 May 2020 07:34 PM

உம்பன் புயலால் 1.9 கோடி குழந்தைகள் கடும் நெருக்கடியை எதிர்கொள்வார்கள்: யூனிசெஃப்

வங்கக் கடலில் உருவான உம்பன் புயலால் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் 1.9 கோடி குழந்தைகள் கடும் நெருக்கடியை எதிர்கொள்வார்கள் என்று சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான உம்பன் புயல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள திஹா மற்றும் வங்கதேசத்தில் உள்ள ஹதியா இடையே புதன்கிழமை கரையைக் கடந்தது. 4 மணி நேரத்துக்கும் மேலாக புயல் கரையைக் கடந்த நிலையில் மணிக்கு 160-170 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் இந்தியாவின் மேற்கு வங்காளம், ஓடிசா ஆகிய மாநிலங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின.

புயல் பாதிப்பு பகுதியில் உள்ள 5 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் மட்டும் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கரோனா தொற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில், உம்பன் புயல் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் உம்பன் புயல் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் 1.9 கோடி குழந்தைகள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று சர்வதேச குழந்தைகள் அமைப்பான யூனிசெஃப் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யுனிசெஃப் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா மற்றும் வங்கதேசத்தில் 1.9 கோடி குழந்தைகள் இந்த உம்பன் புயல் காரணமாக கடும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். இதுபோன்ற பேரிடர் காலகட்டத்தில் மக்கள் சமூக இடைவெளியைப் பேணுவது சிரமம். இதனால் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், புயல் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களின் சுகாதார நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.,புயலால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவிகள் வழங்குவதில் இந்தியா மற்றும் வங்கதேச அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x