Published : 21 May 2020 03:04 PM
Last Updated : 21 May 2020 03:04 PM

கரோனா ஊரடங்கால் புற்றுநோய் சிகிச்சையில் இருந்த சகோதரியைப் பார்க்க முடியாமல் தவித்த பெண்: நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சந்திப்பு

''உண்மையைக் கூற வேண்டும் என்றால் நான் தற்போது இருக்கும் உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது'' என்கிறார் கிறிஸ்டின் ஹார்சர். புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும் தனது சகோதரியை நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்த மகிழ்ச்சியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளுக்குக்கிடையே இன்னும் எல்லைப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதன் காரணமாக தங்களது நேசத்துக்குரியவர்களைப் பார்க்க முடியாத தவிப்புக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். அந்த வகையில் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்டின் ஹார்சர் ஆஸ்திரேலியாவில் புற்றுநோய் சிகிச்சை எடுத்து வரும் தனது சகோதரியான கெயில் பார்க்கரைப் பார்க்க முடியாமல் தவித்து வந்தார்.

தனது சகோதரியைச் சந்திப்பது தொடர்பாக 4 முறை விண்ணப்பித்தும், அதனை ஆஸ்திரேலிய அரசு நிராகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது கோரிக்கை ஊடகங்களில் வலம் வர, தற்போது தனது சகோதரியை ஆறு வருடங்களுக்குப் பிறகு சந்தித்திருக்கிறார் கிறிஸ்டின்.

சகோதரியைச் சந்திப்பதற்கு முன்னர் அவருக்கு கரோனாவுக்கான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு அவர் ஒரு வாரம் ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டார். தனது சகோதரியின் இறுதிக் காலத்தில் அவருடன் இருக்க முடிந்ததற்கு கிறிஸ்டின் ஹார்சர் நன்றி தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் ஊடகத்தில் கிறிஸ்டின் பேசும்போது, ''நான் எதிர்கொண்டுள்ள உணர்வுகளை வெறும் வார்த்தைகளால் கூற முடியாது. நான் இறுதியாக என் சகோதரியுடன் இருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த இரண்டு வாரங்கள் எனது வாழ்க்கையிலேயே சந்தித்த கடுமையான நாட்கள். எனது மனுவை ஆஸ்திரேலிய அரசு நிராகரித்ததற்கு அவர்களுக்கு இரக்கம் இருக்குமா என்று நான் ஆச்சரியப்பட்டேன். அவர்கள் என்ன நினைத்தார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை.

எனது சகோதரியை நான் பார்க்க முடியாமல் போய்விடும் என்று நினைக்கவில்லை. அவ்வாறு நடந்திருந்தால் அது உலகின் மிக மோசமான நிகழ்வாக இருந்திருக்கும்'' என்றார்.

இந்த நிலையில் இரண்டு சகோதரிகளும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்தித்துக்கொண்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x