

பிரேசிலில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்நாட்டின் மீது பயணத் தடை விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்நிலையில் பிரேசிலில் இருந்து மக்கள் அமெரிக்காவுக்கு வருவதைத் தடை செய்ய அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, ''பிரேசில் மக்கள் அமெரிக்காவுக்கு வருகை தந்து அவர்களால் இங்குள்ள அமெரிக்கர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை நான் விரும்பவில்லை. அதேபோல், எங்களால் அங்கு நோய்த்தொற்று ஏற்படவும் விரும்பவில்லை. எனவே பிரேசில் நாட்டின் மீது பயணத் தடை விதிப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.
கரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோவும் அலட்சியமாக நடந்து வருவதாக உலக அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கரோனா நடவடிக்கை தொடர்பாக பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கும் அந்நாட்டு சுகாதாரத்துறை நிபுணர்களுக்கும் இடையே தொடர்ச்சியாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. கரோனா நடவடிக்கை தொடர்பாக போல்சனாரோவின் கருத்துக்கு மாற்றுக் கருத்து தெரிவித்ததால், சுகாதரத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டா கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட நெல்சன் டீச்சும் சில தினங்களுக்கு முன் பதவி விலகினார்.
பிரேசிலில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,983 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் 15 லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 92 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.