

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 49,89,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹாப்கின்ஸ் கூறும்போது, “உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றுக்கு 49, 89,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 15,70,583 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து ரஷ்யாவில் 2,99,941 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக கரோனா தொற்றால் அமெரிக்காவில் 93,533 பேர் பலியாகினர். அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனில் அதிகபட்சமாக 35,341 பேர் பலியாகியுள்ளனர். பிரான்ஸில் 28,022 பேரும், ஸ்பெயினில் 27,778 பேரும் பலியாகியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 18,60,056 பேர் கரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின்,பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.
கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்காததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்குச் சவாலாக உள்ளது.