

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனாடான அனைத்து ஒப்பந்தங்களும் முடிவுக்கு வருவதாக பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் பேங்க் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை இணைக்கும் இஸ்ரேலின் திட்டம் தொடர்பாக அவசரக் கூட்டம் ஒன்று பாலஸ்தீன அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இதுகுறித்து பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கூறும்போது, “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான அனைத்து ஒப்பந்தங்களும் (பாதுகாப்பு ஒப்பந்தங்கள் உட்பட) முடிவுக்கு வருகின்றன” என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை இணைப்பது குறித்து இஸ்ரேல் முடிவு எடுத்த நிலையில் இந்த அறிவிப்பை பாலஸ்தீனம் வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீனப் பகுதியிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை இஸ்ரேலுடன் இணைப்பதுதான் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது.
ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக ட்ரம்ப் அறிவித்தபோதே, பாலஸ்தீனம் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த 1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்துள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.
பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்தது.