Published : 19 May 2020 08:42 PM
Last Updated : 19 May 2020 08:42 PM

கரோனா வைரஸ்: உலக சுகாதார அமைப்பின் விசாரணை தொடர்பாக உலக நாடுகள் அளித்த ஆதரவுக்கு ஆஸ்திரேலியா வரவேற்பு

கரோனா வைரஸ் தோன்றியது முதல் அதன் பரவலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வரையும் உலக சுகாதார அமைப்பு சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன.

இதனை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், விசாரணை தொடர்பாக உலக நாடுகள் அளித்த ஆதரவை ஆஸ்திரேலிய அரசு வரவேற்றுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் தொடர்பான சுதந்திர விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசு ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கு சீன அரசு வரி வகிதத்தை உயர்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சிக்கு சென்ற வாரம், சீனா தடை விதித்தது. இந்நிலையில் தற்போது கோதுமைக்கு 80 சதவீதம் வரி விதித்துள்ளது. இதனை ஆஸ்திரேலிய அரசு கண்டித்துள்ளது.

முன்னதாக, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கரோனா பரவல் தொடர்பாக வெளிப்படையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் நேற்று ஜெனிவாவில் நடந்த உலக சுகாதார மாநாட்டில், கரோனா தொடர்பான விசாரணைக்கு இந்தியா உட்பட 120க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையின் உலக நாடுகளின் ஆதரவை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.

சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா கூறியது. கரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்குச் சாதகமாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்நிலையில் கரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள உலக நாடுகள் விடுத்திருந்த கோரிக்கையை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x