உலக சுகாதார அமைப்புக்கு நிரந்தரமாக நிதி நிறுத்தப்படும்: ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்புக்கு நிரந்தரமாக நிதி நிறுத்தப்படும்: ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
Updated on
1 min read

உலக சுகாதார அமைப்புக்கு நிரந்தரமாக நிதி நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

கரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்புக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “அடுத்த 30 நாட்களுக்குள் அடுத்தகட்ட மேம்பாடுகளுக்கான நடவடிக்கையை உலக சுகாதார அமைப்பு எடுக்கவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்திய நிதியை நிரந்தரமாக நிறுத்த நேரிடும். மேலும் அந்த அமைப்பில் எங்கள் இருப்பையும் மறுபரிசீலனை செய்வோம்” என்றார்.

மேலும், இது தொடர்பாக முடிவெடுக்கும் நேரத்தை வீணாக்காமல் உலக சுகாதார அமைப்பு உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்காதான் அதிகமாக நிதியுதவி அளிக்கிறது. கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர் வரை அமெரிக்கா நிதி உதவி செய்கிறது. சீனாவோ வெறும் 38 மில்லியன் டாலர்தான் வழங்குகிறது. ஆனாலும், அவ்வமைப்பு சீனாவுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகத் தெரிகிறது. அவ்வமைப்பு முறையாகச் செயல்பட்டிருந்தால், தற்போது உலக அளவில் ஏற்பட்டு இருக்கும் கரோனா பாதிப்பைத் தடுத்திருக்க முடியும். சீனாவின் ஊதுகுழலாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருகிறது என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

மேலும், உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை நிறுத்தினார்.

கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆரம்பம் முதலே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவை விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in