

மலேசியாவில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,941 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மலேசிய அரசுத் தரப்பில், “மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மலேசியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,941 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸ் தொற்றுக்கு 113 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனாவுக்கான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
கரோனா தொற்றுப் பரவலை முற்றிலுமாகத் தடுக்கும் நோக்கில் மலேசியாவில் ஜூன் மாதம் 9 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை வர உள்ளதால் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்து சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு மலேசிய அரசு மக்களை அறிவுறுத்தியுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸ், 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்றால் 48,05,229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 18 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மீண்டுள்ளனர்.