Published : 19 May 2020 08:27 AM
Last Updated : 19 May 2020 08:27 AM

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று தாவூத் கூட்டாளியை நாடு கடத்தி அனுப்ப பாகிஸ்தான் வம்சாவளி அமைச்சர் தடை: பிரிட்டன் உள்துறை வட்டாரங்கள் தகவல்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு பிரிட்டனைச் சேர்ந்த பாகிஸ்தான் வம்சாவளி அமைச்சர் தடையாக இருந்தார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் சூரத் நகரில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில்தேடப்பட்டு வந்தவர் டைகர் ஹனீப். இவரது முழுப் பெயர் முகமது ஹனீப் உமர்ஜி படேல். இவர் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி. குண்டுவெடிப்புக்குப் பிறகு வெளிநாடு தப்பிச் சென்ற டைகர் ஹனீப்பை, பிரிட்டனைச் சேர்ந்த ஸ்காட்லாந்து யார்ட் போலீஸார் 2010-ம் ஆண்டு கைது செய்தனர். அப்போது முதலே அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர். அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

கடந்த 2019-ம் ஆண்டும் அவரை இந்தியாவுக்குக் கொண்டுவர அதிகாரிகள் முயற்சித்தனர். அதற்கு அப்போது பிரிட்டன் உள்துறை அமைச்சராக இருந்த சஜித் ஜாவித் தடையாக இருந்தார் என்று இப்போது தெரிய வந்துள்ளது. இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர்.

இதுதொடர்பாக பிரிட்டன் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “டைகர் ஹனீப்பை விடுவிக்க அமைச்சர் சஜித் ஜாவித் தடையாக இருந்தார் என்று உறுதியாகக் கூற முடியும். டைகர் ஹனீப்பை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை, நீதிமன்றம் மூலம் கடந்த 2019 ஆகஸ்டில் நிராகரிக்கப்பட்டது” என்று தெரிவித்தன.

டைகர் ஹனீப் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டால் அங்கு அவர் சித்திரவதை செய்யப்படுவார் என்றும், அதனால் அவரை நாடு கடத்த உத்தரவிட முடியாது என்றும் அப்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளிகளை நாடு கடத்துதல் தொடர்பாக இந்தியா - பிரிட்டன் இடையே நடந்த ஒப்பந்தத்தின்படி, யாரையாவது நாடு கடத்த வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நாடுகளைச் சேர்ந்த உள்துறை அமைச்சரின் ஒப்புதல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x