Published : 19 May 2020 08:23 AM
Last Updated : 19 May 2020 08:23 AM

கரோனா வைரஸுக்கு எதிராக போராடும் சுகாதாரத் துறை பணியாளர்களை ஊக்குவித்த இந்திய சிறுமிக்கு அதிபர் ட்ரம்ப் பாராட்டு

கரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் சுகாதாரத் துறை ஊழியர்களை ஊக்குவித்த, இந்திய வம்சாவளி சிறுமியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டினார்.

அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். அமெரிக்காவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவிட்-19 காய்ச்சலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஸ்ராவ்யா அன்னப்பரெட்டி உள்ளிட்ட 3 சிறுமிகள், பிஸ்கட்கள் வழங்கி ஊக்குவித்தனர். சுகாதாரத்துறையைச் சேர்ந்த டாக்டர்கள்,செவிலியர்கள் மற்றும் தீயணைப்புவீரர்கள் ஆகியோருக்கு பிஸ்கட்களை ஸ்ராவ்யா உள்ளிட்ட 3சிறுமிகள் வழங்கினர். மேலும் அவர்களுக்கு வாழ்த்து அட்டைகளையும் ஸ்ராவ்யா அனுப்பியுள்ளார். இவரது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து, சமூக வலைதளத்திலும் பதிவிட்டனர்.

இந்நிலையில் சிறுமி ஸ்ராவ்யாவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் ஆகியோர் நேரில் அழைத்துப் பாராட்டினர். அவருக்கு பரிசுகளை ட்ரம்ப் வழங்கி ஊக்குவித்தார். அப்போது ட்ரம்ப் கூறும்போது, “கரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் சுகாதாரப் பணியாளர்களின் வீரம், துணிச்சல், அர்ப்பணிப்பு, அன்பு ஆகியவற்றை நினைத்து பிரமிப்பு அடைகிறேன். சிறுமிகளின் சேவையை வெகுவாகப் பாராட்டுகிறேன். அவர்களது சேவை என்னை நெகிழச் செய்து விட்டது" என்றார்.

ஸ்ராவ்யாவுடன் மேலும் 2 சிறுமிகளும் நேரில் அழைத்துப் பாராட்டப்பட்டனர். சிறுமி ஸ்ராவ்யா, அமெரிக்காவில் உள்ள சாரணியர் (ஸ்கவுட்) பிரிவில் இணைந்து சேவையாற்றி வருகிறார். ஸ்ராவ்யா, ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர். ஸ்ராவ்யாவின் பெற்றோர் வேலை நிமித்தமாக அமெரிக்காவில் குடியேறி தங்கிவிட்டனர். ஸ்ராவ்யாவுடன், சிறுமிகள் லைலா கான், லாரன் மேட்னி ஆகியோர் மொத்தம் 100 அட்டைப் பெட்டிகளில் பிஸ்கட்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x