

சீனாவில் புதிதாக 25 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலனவர்களுக்கு அறிகுறி இல்லாமல் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ சீனாவில் இன்று (திங்கட்கிழமை) புதிதாக 25 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 14 பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் இந்த 14 பேரும் வூஹானை சேர்ந்தவர்கள். இதுவரை வூஹானில் மட்டும் எந்தவித அறிகுறியும் இல்லாமல் சுமார் 337 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது அறிகுறி இல்லாமல் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாட்டிலேயே வூஹானில் அதிகமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வூஹானில் உள்ள சுமார் 1 கோடி மக்களையும் அடுத்த 10 தினங்களுக்குள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்த அரசு திட்டமிட்டது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை முதல் வூஹானில் மக்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
மேலும், சீனாவில் கரோனா தொற்று பரவ தொடங்கியுள்ள ஜிலின் மாகாணத்தில் கடுமையான கட்டுபாடுகளை சீனா விதித்து வருகிறது.
சீனாவில் இதுவரை கரோனா தொற்றால் 82,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4, 632 பேர் பலியாகி உள்ளனர். 78,238 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்
முதன்முதலாக கரோனா தொற்று சீனாவில் உள்ள வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உறுதி செய்யப்பட்டது. சில நாட்களிலே கரோனா தொற்று மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. பரவலைக் கட்டுப்படுத்த வூஹான் முழுமையாக முடக்கப்பட்டது. பின்னர் வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து 76 தினங்களுக்குப்பிறகு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்டது.