

இஸ்ரேலுக்கான சீனத் தூதர் டு வெய், டெல் அவிவ் நகரத்தின் வடக்கே உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தூதரின் திடீர் மரணத்திற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதுகுறித்து விசாரணை நடத்துவதாக இஸ்ரேலிய போலீஸார் தெரிவித்தனர்.
58 வயதான டு வெய், பிப்ரவரி மாதம் கரோனா வைரஸ் தொற்றுநோய்ப் பரவலுக்கு மத்தியில் இஸ்ரேலின் தூதராக நியமிக்கப்பட்டார். அவர் முன்பு உக்ரைனுக்கான சீனாவின் தூதராகப் பணியாற்றினார். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். அவர்கள் இருவரும் இஸ்ரேலில் வசிக்கவில்லை.
இஸ்ரேலைப் பொறுத்தவரை சீனாவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. தொடர்ந்து நல்லுறவில்தான் உள்ளது. மேலும் இஸ்ரேலில் சீனா தொடர்ந்து முதலீடுகள் செய்து வருகிறது.
சமீபத்தில் இஸ்ரேல் நாட்டில் சீனா முதலீடுகள் செய்து வருவதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், கரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய பற்றிய தகவல்களை சீனா மறைத்து வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரின் பேச்சுக்கு இஸ்ரேலுக்கான சீனத் தூதரான டு வெய் இரண்டு நாட்களுக்கு முன்புதான் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.