அதிபருடன் கருத்து வேறுபாடு: பிரேசிலில் அடுத்த சுகாதாரத்துறை அமைச்சரும் பதவி விலகல்

பிரேசில் அதிபர்
பிரேசில் அதிபர்
Updated on
1 min read

பிரேசிலில் கரோனா தடுப்பு நடவடிக்கைத் தொடர்பாக அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சானாரோ மேற்கொண்டுவரும் முடிவுகள் குறித்து, அதிருப்தி தெரிவித்ததைத் தொடர்ந்து அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் நெல்சன் டீச் பதவி விலகியுள்ளார்.

கரோனா நடவடிக்கை தொடர்பாக அதிபர் போல்சனாரோவுக்கும் சுகாதாரத்துறை நிபுணர்களுக்கும் இடையே தொடர்ச்சியாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுவருகிறது. அவருடைய முடிவுக்கு மாற்றாக கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டா கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஒரு மாதத்துக்குள்ளாகவே புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரான நெல்சன் டீச்சும் பதவி விலகியுள்ளார்.

பிரேசில் அதிபர் போல்சனாரோ கரோனா வைரஸ் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளை மிக அலட்சியமாகக் கையாண்டு வருகிறார். அங்குள்ள மாகாண ஆளுநர்கள் விதித்திருக்கும், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற தேவையில்லை என்று உத்தரவிட்டுள்ளார். தற்போது கரோனா தொற்றைத் தடுக்க ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்த வேண்டும் கூறியுள்ளார். ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மலேரியாவுக்கான மருந்தாகும்.

இந்நிலையில், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளாமல் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கருத்து மோதலினால் கடந்த மாதம் சுகாதாரத் துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது புதிய சுகாதார அமைச்சர் நெல்சன் டீச்சும் பதவி விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகி இருப்பதாக அதிபர் அலுவலக தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் தன்னுடைய பதவி விலகல் முடிவு குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

பிரேசிலில் கரோனா வைரஸ் தொற்று விகிதமும், இறப்பு விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரேசிலில் 2.2 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. 14,962 பேர் பலியாகி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in