

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 1,581 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ''பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 1,581 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனா தொற்று எண்ணிக்கை 38,799 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் அதிகபட்சமாக பஞ்சாப்பில் 14,201 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்கு 834 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தினமும் 14,000க்கும் அதிகமானவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. பாகிஸ்தானில் இதுவரை 3,59,264 பேருக்கு கரோனா மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
பல்வேறு உலக நாடுகளைப் போல பாகிஸ்தானிலும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கினால் கடும் பொருளாதார நெருக்கடியையும் பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் தொழில் செயல்பாடுகள் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தான் கடந்த சனிக்கிழமை தளர்த்தியது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தானில் வரும் ஜூன் மாதத்தில் கரோனா தொற்று அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.