Last Updated : 15 May, 2020 08:16 AM

 

Published : 15 May 2020 08:16 AM
Last Updated : 15 May 2020 08:16 AM

சீன அதிபருடன் இப்போது பேச விரும்பவில்லை: ஒட்டுமொத்தமாக உறவுகளையே முடித்துக் கொள்ள முடியும்- ட்ரம்ப் ஆவேசம்

சீன அதிபருடன் வர்த்தக உறவுகள் குறித்து இப்போதைக்கு பேச்சுவார்த்தைகள் இல்லை, கரோனா விவகாரத்தில் சீனாவின் செயல்பாடுகள் கடும் ஏமாற்றத்தை அளிக்கின்றன, என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

கரோனா பாதிப்பு உலகம் முழுதும் 45 லட்சத்து 25,420 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்து 303,371. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 86,912 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்கெனவே வர்த்தகங்களில் கடும் மோதல் இருந்து வரும் நிலையில் கரோனா பாதிப்பும் இணைந்திருப்பதால், கடந்த ஆண்டு முதற்கட்ட ஒப்பந்தம் போடப்பட்டதோடு இழுபறி நீடித்து வருகிறது.

“சீனா எங்கேயோ கூறியது மீண்டும் பேச்சுவார்த்தை என்று. நாங்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக இல்லை. வர்த்தகம் பற்றி சீனாவுடன் பேச இப்போதைக்கு விரும்பவில்லை. நான் சொன்னதெல்லாம் சரியாகவே உள்ளது. மற்ற நாடுகளைப் பாருங்கள் எங்கள் பொருட்களுக்கு வரி விதிக்கிறார்கள், ஆனால் நாங்கள் விதிக்கக் கூடாதாம்.

சீனா எப்போதும் அறிவுச்சொத்துரிமையை அமெரிக்காவிடமிருந்து களவாடி வந்திருக்கிறது. நாங்கள் அவர்களை நிறுத்த முடியும். அதாவது அவர்களுடன் வர்த்தகத்தையே நிறுத்தலாம் என்று கருதுகிறேன். நாம் தான் சீனாவை மறுகட்டமைத்துள்ளோம்.

இங்கு எனக்கு முன்பாக பதவியில் அமர்ந்த பராக் ஒபாமா உட்பட அமெரிக்காவை சீனா சுரண்ட அனுமதித்தனர். தூங்கி வழியும் ஜோ பிடனும்தான். ஆண்டு ஆண்டாக பில்லியன் டாலர்கள் கணக்கில் சீனாவுக்குக் கொட்டிக்கொடுத்துள்ளோம்.

சீன அதிபருடன் நல்லுறவு உள்ளது, ஆனால் அவருடன் இப்போதைக்கு பேச விரும்பவில்லை. சீனாவுடன் முழுக்க முழுக்க உறவுகளையே துண்டிக்கலாம், நாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். மொத்தமாக வர்த்தகத்தையே துண்டித்தால் 500 பில்லியன் டாலர்களை சேமிக்க முடியும்.” என்றார் ட்ரம்ப்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x