

கரோனா வைரஸ் காரணமாக குழந்தைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் இதன் காரணமாக உலக அளவில் அடுத்த 6 மாதங்களில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் நாளொன்றுக்கு 6000 பேர் வரையிலும் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் யூனிசெஃப் தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தற்போது ஐந்தாவது மாதமாக உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் காரணமாக குழந்தைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து யூனிசெஃப் நிர்வாக இயக்குநர் ஹென்ரிட்டா போர் கூறும்போது, “கரோனா வைரஸ் தாக்கம் தற்போது நெருக்கடியாக மாறி வருகிறது. இதன் காரணமாக உலக அளவில் அடுத்த 6 மாதங்களில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் நாளொன்றுக்கு 6000 பேர் வரையிலும் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரோனா நோயின் தாக்கம் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல சந்தர்ப்பங்களில் அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் சேவை உதவிகளைக் குறைந்த அளவில் அனுபவித்து வருகின்றனர். அதே நேரத்தில் குழந்தைகள் இனவெறி மற்றும் பாகுபாடுகளுக்கு ஆளாகி வருகின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 44,29,969 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,98,180 பேர் பலியாகியுள்ளனர். 16,59,873 பேர் குணமடைந்துள்ளனர்.