

உலகத்தையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் எப்போது முடியும், ஒழியும், உலகத்தை விட்டுச்செல்லும் எனக் கணிப்பதே கடினமாக இருக்கிறது. ஆதலால் அனைத்து நாடுகளும் கரோனா வைரஸை அழிக்கும் முயற்சியில் நம்பிக்கையுடன், ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
ஜெனிவா நகரில் உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டங்களின் இயக்குநர், மருத்துவர் மைக்கேல் ரேயன் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''மனித சமூகத்துக்குள் முதன்முறையாக ஒரு புதிய வைரஸ் நுழைந்துள்ளது. இந்த வைரஸ் எப்போது அழிக்கப்படும், ஒழிக்கப்படும், முடியும் எனக் கணிப்பதே கடினமாக இருக்கிறது.
இந்த நேரத்தில் நான் முக்கிய விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். கரோனா வைரஸ் நமது மனித சமூகத்தை விட்டுச் செல்லாது, அது காலப்போக்கில் மற்றொரு பெருந்தொற்று வைரஸாக மாறக்கூடுமே தவிர ஒருபோதும் இங்கிருந்து செல்லாத நிலைகூட ஏற்படலாம். நாம் இதை உணர்ந்துகொள்வது முக்கியம். இந்த வைரஸ் எப்போது மறையும் என்று ஒருவராலும் கணிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்
தடுப்பு மருந்து மூலம் இந்த வைரஸை நாம் அழிக்க வழி இருக்கிறது. ஆனால், அந்தத் தடுப்பு மருந்து மிகுந்த வீரியமாக இருத்தல் அவசியம். அனைத்து மக்களுக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டும். அதை நாம் அதிக அளவு பயன்படுத்த வேண்டும்.
கவலை தரக்கூடிய கரோனா பெருந்தொற்றுநோயை எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாற்ற உலகிற்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். ஆதலால் உலக நாடுகள் அனைத்தும் கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நம்பிக்கையின் அடிப்படையி்ல் பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் மனித சமூகத்துக்கு உதவும்.
இந்த முயற்சியில் நாம் வெற்றி பெற அரசியல் ரீதியாக, நிதி ரீதியாக, செயல்பாட்டு வகையில், தொழில்நுட்ப வகையில், அனைவரும் ஆதரவு அளித்தால்மட்டுமே வெற்றி பெற முடியும்''.
இவ்வாறு மைக்கேல் ரேயன் தெரிவி்த்தார்.
உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் மருத்துவர் மரியா வேன் கெர்கோவ் கூறுகையில், “கரோனா வைரஸை பல நாடுகள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதைப் பார்க்கிறோம். கடுமையாக சுகாதார நடவடிக்கைகள், மக்களிடம் விழிப்புணர்வு, தொற்றுநோய்ப் பிரிவி்ல் கவனம் செலுத்தி இதைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
ஆனால், மக்கள் மீண்டும் வேலைக்குச் செல்லும்போது, வெளியே நடமாடும்போது கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கிவிடும் என்பதை மட்டும் மறந்துவிடக்கூடாது. ஆதலால் கரோனா வைரஸ் தனது இயல்பிலேயே கட்டுப்பட சிறிது காலம் ஆகும். அவசரப்பட்டு லாக்டவுனைத் தளர்த்துதல், மக்களிடையே சுகாதார விழிப்புண்ரவு குறைதல் ஆபத்தை விளைவிக்கும்'' என்றார்.