

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்தவர் விகாஸ் கண்ணா. சமையல் கலைஞரான இவர், மும்பையில் உள்ள பல நட்சத்திர உணவகங்களில் பணியாற்றி இருக்கிறார். தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நட்சத்திர உணவகத்தில் பணிபுரிகிறார். சமையல் கலைக்காக பல்வேறு உயர்ந்த விருதுகளையும் விகாஸ் கண்ணா பெற்றிருக்கிறார்.
இந்நிலையில், கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இந்தியாவில் லட்சக்கணக்கானோர் பசியில் வாடி வருவதாக நண்பர்கள் மூலம் அவர் கேள்விபட்டிருக்கிறார். உடனடியாக அந்த மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
உடனே இந்தியாவில் உள்ளதேசியப் பேரிடர் மீட்புப் படைத் தலைவர் சத்ய நாராயனை தொடர்புகொண்ட விகாஸ், ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க உள்ளதாகவும், அதற்கு அவரது உதவி தேவை எனவும் கூறியுள்ளார். இதற்கு, சத்ய நாராயனும் சம்மதித்துள்ளார்.
அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதல், விகாஸ் கண்ணா அளித்த நிதியைக் கொண்டு 79 நகரங்களில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்கள், தொழுநோயாளிகள் பராமரிப்பு மையம், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றுக்கு 3,100 குவின்டால் (1 குவின்டால் 100 கிலோ) அரிசி, கோதுமை, பயிறு போன்ற உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட மையங்களை தவிர, சாலை ஓரங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கும் உணவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து விகாஸ் கண்ணா கூறியதாவது:
இந்தப் பேரிடர் சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அப்போதுதான் இந்த வைரஸ் அச்சுறுத்தலை நாம் வெற்றி கொள்ள முடியும். ஒற்றுமையே நமது பலம் என்பதை அனைவரும் உணர வேண்டும். நான் ஒன்றும் பெரிதாக செய்து விடவில்லை. என் தாய்நாட்டிடம் இருந்து பெற்றதைதான் நான் இப்போது வழங்கி இருக்கிறேன். உணவுப் பொருட்களை விநியோகிக்க பேருதவியாக இருந்த பேரிடர்மீட்புப் படைக்கு நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு விகாஸ் கண்ணா கூறினார்.