

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது.
குறிப்பாக மார்ச் மாதத்தில் பெண்கள் மீதான வன்முறை தொடர்பாக அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள், “குழந்தை வன்கொடுமை, குடும்ப வன்முறை, கடத்தல், வல்லுறவு ஆகிய குற்றங்கள் ஊரடங்குக்குப் பிறகு அதிக அளவில் நடைபெற்றுள்ளன. ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை 200 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் குழந்தை வன்கொடுமை பிரிவின்கீழ் 13 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மார்ச் மாதத்தில் 61 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஜனவரியில் குழந்தை வன்கொடுமைப் பிரிவில் ஒரு வழக்குகூட பதிவாகவில்லை. அதேபோல் குடும்ப வன்முறைப் பிரிவின் கீழ் பிப்ரவரியில் 6 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில், மார்ச் மாதத்தில் 20 வழக்குகள் பதிவாகியுள்ளன. மார்ச் மாதத்தில் 25 பாலியல் வல்லுறவு வழக்குகளும் 75 கடத்தல் வழக்குகளும் பதிவாகியுள்ளன” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
கரோனாவால் தொழில் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் உலக அளவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளன.
இந்தியாவில் மார்ச் 23 முதல் ஏப்ரல் 16 வரையிலான காலகட்டத்தில் 587 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன. லண்டனில் ஏப்ரல் மாதத்தில் குடும்ப வன்முறை 9 சதவீதம் அதிகரித்துள்ளது. அங்கு குடும்ப வன்முறை குற்றச்சாட்டில் ஏப்ரல் மாதத்தில் 4,093 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.