

கரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமலும் போகலாம் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் கரோனா தாக்கம் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு லாக்டவுன் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகிறது.
ஜூன் 1-ம் தேதிக்குள் கரோனா நோய்த்தொற்று குறைந்துவிடும் சூழலில் பள்ளிகளும், கடைகளும் படிப்படியாகத் திறக்கப்படும். அதேசமயம் மக்கள் அதிகமாகக் கூடும் சில முக்கிய இடங்கள் ஜூலை 1-ம் தேதி தான் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனுக்கு விமானம், கப்பல் மூலம் வரும் வெளிநாட்டினர், உள்நாட்டினர் யாராக இருந்தாலும் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரோனா தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமலும் போகலாம் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகளின் கருத்துப்படி கரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிய ஒரு வருடத்திற்கு மேல் ஆகலாம். ஒருவேளை தடுப்பூசி கண்டறிய முடியாமலும் போகலாம். எனவே, நாம் இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும்” என்றார்.
பிரிட்டனில் கரோனா தொற்றால் 2,23,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32,065 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவுக்கு ( அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு 81,795 பேர் பலியாகியுள்ளனர்) அடுத்தபடியாக கரோனா தொற்றால் அதிக உயிரிழப்பு பிரிட்டனில் ஏற்பட்டுள்ளது.