

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து அமைச்சர்களை கூட்டி அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார் இம்ரான் கான்.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 1,104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 32,081 ஆக அதிகரித்துள்ளது மேலும் இறப்பு எண்ணிக்கை 706 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு, தொழிற் நிறுவனங்கள் திறப்பது மற்றும் வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல்வேறு உலக நாடுகளைப் போல பாகிஸ்தானிலும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஊரடங்கினால் கடும் பொருளாதார நெருக்கடியையும் பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கும் தொழில் செயல்பாடுகள் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தான் கடந்த சனிக்கிழமை தளர்த்தியது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
பாகிஸ்தானில் வரும் ஜூன் மாதம் கரோனா தொற்று அதிகரிக்கும் என்பது மருத்துவ நிபுணர்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.