

விண்வெளியில் சமீபத்தில் ‘குட்டி வியாழன்' கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கண்டுபிடிப்புக் குழுவில் முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்யும் இந்திய அமெரிக்க மாணவர் ஒருவரும் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்கில் உள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் துறையில் இந்திய அமெரிக்க மாணவரான ராகுல் ஐ.படேல், முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்து வருகிறார்.
இவர் இடம்பெற்றிருந்த குழு, நமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே வியாழன் கோளைப் போன்ற ஒரு கோளை கண்டுபிடித்துள்ளது. இதனால் அந்தப் புதிய கோள் 'குட்டி வியாழன்' என்று அழைக்கப்படுகிறது.
‘51 எரிடானி பி' என்று பெயரிடப் பட்டுள்ள இந்தக் கோள், பூமியில் இருந்து 100 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இது 400 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர்ந்த பிரதேசமாக இருப்பதாக வும் கூறப்பட்டுள்ளது.
“நமது சூரிய குடும்பத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களின் சுற்றுப்பாதையில் அமைந்துள்ள சிறுகோள் படையில், வெப்பமான தூசு மூடப்பட்டிருந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டோம். இவ்வாறு ஒரு நட்சத்திரத்தை தூசு சூழ்ந்திருந்தால் அங்கே ஒரு கோள் இருக்கும் என்பது பொதுவான கருத்தாகும். அளவில் பெரிதான சிறுகோள்கள் ஒன்றோடு ஒன்று மோதும்போது இத்தகைய தூசு கிளம்புகிறது” என்றார்.
இவர் இதற்கு முன்பு, இவ்வாறு சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் மோதும்போது ஏற்படும் விளைவுகள் குறித்து ஆராயும் ‘வைஸ்' எனும் குழுவுக்குத் தலைமையேற்றிருந்தார்.
இவரும், இவரது பேராசிரியர் ஸ்டானிமிட் மெட்சேவ்வும் இணைந்து இந்த கண்டுபிடிப்பு குறித்து எழுதிய கட்டுரை ‘சயின்ஸ்' எனும் பிரபல அறிவியல் ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் ‘ஜெமினி ப்ளானெட் இமேஜர் எக்சோ பிளானெட் சர்வே' எனும் குழுவில் உள்ளனர். இந்தக் குழுதான் இந்தக் கண்டுபிடிப்பைச் செய்துள்ளது.