

கரோனா தொற்றுப் பரவலை முற்றிலுமாகத் தடுக்கும் நோக்கில் மலேசியாவில் ஜூன் மாதம் 9 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின் கூறும்போது, “தேசிய பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் ஆலோசனைப்படி மேலும் 4 வாரங்களுக்கு (ஜூன் 9 ஆம் தேதி வரை) ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளது. இது பண்டிகைகள் காலம். மக்கள் கூட்டமாகக் கூடும் தருணம். ஆனால், இவற்றை எல்லாம் இக்காலத்தில் தடுக்க வேண்டும்.
நிறைய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாததை நினைத்து கவலையாக இருப்பார்கள் என்று எனக்கு நன்கு தெரியும். பொறுமையாக இருங்குகள்” என்று தெரிவித்துள்ளார்.
எனினும் எல்லைக்குட்டப்பட்ட பகுதிகளில் உறவினர்களுக்கு வீடுகளுக்குச் சென்று ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளைக் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கரோனா தொற்றுக்கு 6,726 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,113 பேர் குணமடைந்துள்ளனர். 109 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸ், 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் 41,02,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2,82,719 பேர் பலியாகியுள்ளனர். 14,93,490 பேர் குணமடைந்துள்ளனர்