

பிரேசிலில் கரோனா தொற்றால் 1,60,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில், “கடந்த 24 மணிநேரத்தில் பிரேசிலில் கரோனா தொற்றுக்கு 6,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,62,699 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 496 பேர் இறக்க, பிரேசிலில் கரோனா தொற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 11,000 ஆக அதிகரித்துள்ளது. 61,000 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரேசிலில் கரோனா தொற்றால் பலியானவர்களுக்கு 3 நாள் துக்க தினத்தை அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சினோரா, கரோனா தொற்றைச் சரியாகக் கையாளவில்லை. பிரேசில் மக்கள்தான் ஒன்றிணைந்து இனி அவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகையக அக்கறையற்ற அதிபருக்கு அவர்கள் உரிய பதில் கொடுக்க வேண்டும் என்றும் பிரிட்டன் இதழான 'தி லான்செட்' சமீபத்தில் தலையங்கம் வெளியிட்டு விமர்சித்திருந்தது.
முன்னதாக, சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பிரேசிலில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருவது தொடர்பாக அதிபர் போல்சினாரோவிடம் கேட்கபட்டபோது, ''அதற்கு என்னை என்னச் செய்யச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் பதிலளித்தது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்தை உருவாக்கியது.