Last Updated : 11 May, 2020 08:44 AM

 

Published : 11 May 2020 08:44 AM
Last Updated : 11 May 2020 08:44 AM

பிரிட்டனில் 'மாற்றங்களுடன்' லாக்டவுன் நடைமுறை; மக்கள் வெளியே வர அனுமதி: பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவிப்புக்கு எதிர்க்கட்சியினர் அதிருப்தி

பிரிட்டனில் கரோனா வைரஸின் தாக்கம் குறைந்தபின் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பொதுமக்கள் கூடும் முக்கியமான இடங்கள் ஜூலை 1-ம் தேதி தான் திறக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்தார்.

பிரிட்டனில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதுவரை 2.19 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 32 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் கூட கரோனாவால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்து பணிக்குத் திரும்பியுள்ளார்.

இந்நிலையில் பிரிட்டன் மக்கள் அனைவரும் கடந்த 7 வாரங்களுக்கு மேலாக வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர். எப்போது லாக்டவுன் முடிவுக்கு வரும் எனத் தெரியவில்லை. இருப்பினும் கடந்த சில நாட்களாக பிரிட்டனில் கரோனாவால் உயிரிழப்பு குறைந்து வருவதும், புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைவதும் நம்பிக்கைைய ஏற்படுத்தியுள்ளது.

இந்தசூழலில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் மக்களுக்கு நேற்று தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“பிரிட்டனில் கரோனா தாக்கம் குறைந்து வருகிறது. அதற்குள் நாம் அவசரப்பட்டு லாக்டவுனைத் தளர்த்தக்கூடாது. மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதே என் விருப்பம். இருப்பினும்சில கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் தளர்த்தப்படுகிறது.

ஜூன் 1-ம் தேதிக்குள் கரோனா நோய்த்தொற்று குறைந்துவிடும் சூழலில் பள்ளிகளும், கடைகளும் படிப்படியாகத் திறக்கப்படும். அதேசமயம் மக்கள் அதிகமாகக் கூடும் சில முக்கிய இடங்கள் ஜூலை 1-ம் தேதிதான் திறக்கப்படும்.

பிரிட்டனுக்கு விமானம் மூலம், கப்பல் மூலம் வரும் வெளிநாட்டினர், உள்நாட்டினர் யாராக இருந்தாலும் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். நோய்ப் பரவலைத் தடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்த வாரம் முதல் மக்கள் பணிக்கு வருவதற்கு ஊக்கப்படுத்தப்படுவார்கள். வீட்டுக்குள் செய்ய முடியாத பணியில் ஈடுபடுபவர்கள் அதாவது கட்டுமானம், உற்பத்தித் துறையில் இருப்பவர்கள் பணிக்குத் திரும்பலாம். மக்கள் பெரும்பாலும் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பூங்காக்கள், முக்கிய இடங்களில் குடும்பத்தினருடன் மட்டும் அமரலாம். வரும் புதன்கிழமை முதல் மக்கள் வெளியே வந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக கோல்ப், டென்னிஸ், மீன்பிடித்தல் போன்றவற்றில் குடும்பத்தினருடன் ஈடுபடலாம்.

ஜுன் 1-ம் தேதி முதல் 11 வயதுள்ள குழந்தைகள்வரை பள்ளிக்குச் செல்லலாம். அத்தியாவசியமற்ற கடைகள் திறக்க அனுமதிக்கப்படும். ஜூலை மாதத்தில் உணவகங்கள், ரெஸ்டாரன்ட், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட முக்கியான இடங்கள் திறக்கப்படும்.

அதேசமயம், மதுபான விடுதிகள், பப் இன்னும் சில மாதங்களுக்குத் திறக்கப்படாது. அதேபோல செப்டம்பர் மாதம் வரை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படாது.

இந்தப் புதிய அனுமதியை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள். இந்த விதிமுறைகள் தளர்த்தப்படுவதில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டு மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்தால் உடனடியாக விதிமுறைகள் தளர்வு நிறுத்தப்படும். கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மீண்டும் தீவிரமான பாதிப்பு வராது என நம்புகிறேன்''.

இவ்வாறு போரிஸ் ஜான்ஸன் தெரிவித்தார்.

போரிஸ் ஜான்ஸனின் இந்தப் புதிய திட்டத்துக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டம் மக்களுக்குப் பாதிப்பைக் கூடுதலாக அதிகரிக்கும் என எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x