

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகளான இவான்கா ட்ரம்ப்பின் உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் இவராகும்.
இதுகுறித்து சிஎன்என் வெளியிட்ட செய்தியில், “இவான்கா ட்ரம்ப்பின் உதவியாளருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருடன்தான் கடந்த மூன்று வாரமாக இவான்கா ட்ரம்ப் பணி நிமித்தமாக தொடர்பில் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவான்கா ட்ரம்ப்புக்கும், அவரது கணவர் ஜேர்ட் குஷ்னருக்கும் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் இருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸின் செய்தித் தொடர்பாளருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இவான்கா ட்ரம்ப்பின் உதவியாளருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா பொருளாதார ரீதியாகவும், வைரஸ் தொற்று காரணமாகவும் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது.
அமெரிக்காவில் கரோனா தொற்றால் 13, 22,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 78,616 பேர் பலியாகியுள்ளனர். 2,23,749 பேர் குணமடைந்துள்ளனர்.