Last Updated : 20 Aug, 2015 10:10 AM

 

Published : 20 Aug 2015 10:10 AM
Last Updated : 20 Aug 2015 10:10 AM

அமைதிப்படைக்கு அனுப்பும் வீரர்களை ‘அவுட்சோர்சிங்’ செய்யக் கூடாது: ஐநாவிடம் இந்தியா வலியுறுத்தல்

ஐக்கிய நாடு மன்றம், தனது அமைதிப்படைகளை பிராந்திய அமைப்புகளிடம் கொடுத்துவிட்டு, தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐநாவின் கீழ் அமைதிப்படை இயங்கி வருகிறது. இதற்குப் பல நாடுகளும் தங்கள் ராணு வத்தில் இருந்து வீரர்களை அளித் துள்ளன. உலகில் எங்கெல்லாம் உள்நாட்டுப் போர் உள்ளிட்ட பிரச்சி னைகள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் அமைதிப்படைகள் செயலாற்றி வருகின்றன.

தற்போது, ஐநாவும், ஆப்பிரிக்க ஒன்றியமும் இணைந்து சூடான் நாட்டில் அமைதிப்படைகளை நியமித்து பணியாற்றி வருகின்றன. இங்கு ஐநாவின் அமைதிப்படைகளை ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகளின் ராணுவமே நிர்வகித்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் 'பிராந்திய அமைப்பு களும் சர்வதேசப் பாதுகாப்புக் கான தற்கால சவால்களும்' என்ற தலைப்பில் கூட்டம் ஒன்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்றது.

அதில் பேசிய நிரந்திர பிரதிநிதி பக்வந்த் எஸ்.பிஷ்னோய் கூறிய தாவது: பிராந்திய அமைப்புகள் ஐநா அமைதிப்படைக்கு உதவி செய்கின்றன. எனினும், முழுமை யான அமைதிப்படைக்கான‌ தேவையை யாரும் நிராகரித்து விட முடியாது.அப்படியிருக்கும் போது, ஐநா தனது அமைதிப் படையை ஆப்பிரிக்கக் கண்டத் திடம் ஒப்படைத்துவிட்டு, தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது.

அவ்வாறு அமைதிப் படை களை, பிராந்திய அமைப்புகளே நிர்வகிக்கத் தொடங்கினால், அங்கு பாகுபாடுகள் தோன்று வதற் கான வாய்ப்புகள் உருவாகும். இதுபோன்று அமைதிப்படை களை 'அவுட்சோர்சிங்' செய்வ தற்கு முன்பு பாதுகாப்பு கவுன்சி லிடமும், துருப்புகளை பங்களிக் கும் நாடுகளிடமும் ஆலோசிக்க வேண்டும்.

அரசியல் ரீதியான நடவடிக் கைகள் மூலமாக மோதல்களுக் குத் தீர்வு காண்பதே முன்னுரிமை யாக இருக்க வேண்டும். பிராந்திய அமைப்புகள் ராணுவத்தின் துணை கொண்டு மோதல் களுக்குத் தீர்வு காண்பது அர்த் தமற்றதாகும்.

பாதுகாப்பு கவுன்சிலில் எந்த ஒரு ஆப்பிரிக்க நாடும் நிரந்திர உறுப்பினராக இல்லாத பட்சத்தில், மூன்றில் இரண்டு பங்கு அமைதிப்படை பணிகள் ஆப்பிரிக்காவில் தான் செயல் படுத்தப்ப‌ட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன், "பிராந்திய பிரச்சினைகளை, பிராந்திய அமைப்புகளே முடிவுக் குக் கொண்டு வரும் அளவுக்கு நாம் அவற்றை திறன் கொண்டவை யாக மாற்ற வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x