Published : 21 Aug 2015 10:40 AM
Last Updated : 21 Aug 2015 10:40 AM

உலக மசாலா: ஆட்டுக்கால் மனிதன்!

இங்கிலாந்தில் வசிக்கிறார் தொழில்நுட்ப வல்லுனர் தாமஸ் த்வைடெஸ். தன்னுடைய தொழில்நுட்பத்தை வைத்து, விடுமுறையை வித்தியாசமாகக் கழிக்க முடிவு செய்தார். ஆட்டின் கால்களைப் போன்று நான்கு செயற்கைக் கால்களையும் தலைக் கவசத்தையும் உருவாக்கிக்கொண்டார். ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைக்குச் சென்றார். கால்களையும் தலைக் கவசத்தையும் மாட்டிக்கொண்டார். ஆடுகளுடன் ஆடாக வலம் வந்தார். ஒருகட்டத்தில் ஆடுகள் மேய்வதை நிறுத்திவிட்டு, தாமஸை உற்று நோக்க ஆரம்பித்துவிட்டன.

மலைகளில் ஏறுவதைக் காட்டிலும் ஆடாக இருந்தபோது தலையைக் குனிந்துகொண்டு இறங்குவது மிகவும் சிரமமாக இருந்தது. பனிப்பொழியும் ஆல்ப்ஸ் மலையில் ஆடுகளோடு இரவில் தங்கியது போன்ற துயரம் உலகில் வேறு ஒன்றும் இல்லை. அதற்காக நெருப்பைக் கொளுத்தி, குளிரைச் சமாளித்ததாகச் சொல்கிறார். ’’மனிதன் கண்டுபிடித்த தொழில்நுட்பம் மூலம் அவனது ஆசையை எவ்வளவு தூரம் நிறைவேற்ற முடியும் என்பதைப் பார்ப்பதற்காகவே இந்த விசித்திரத்தைச் செய்து பார்த்தேன்’’ என்கிறார் தாமஸ்.

இப்படி எல்லாமா ஆசைப்படுவாங்க!

அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் பிரத்யேகமான நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார் டென்வர் சலூனின் உரிமையாளர் கெல்லி ஹீயூப். குறிப்பிட்ட இடைவேளையில் தலை அலங்காரப் பயிற்சி முகாம் நடத்தி வருகிறார். இதில் அப்பாக்களும் மகள்களும் மட்டுமே கலந்துகொள்ள இயலும். ’பியரும் பின்னல்களும்’ என்ற தலைப்பில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.

ஒரு பயிற்சி முகாமில் 6 அப்பாக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். 3600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. நாள் முழுவதும் மகள்களின் தலையில் விதவிதமான பின்னல்கள் போட்டுப் பழக வேண்டும். இறுதியில் எந்தக் குழந்தையின் பின்னல் அழகாக இருக்கிறது என்பதை ஒரு நிபுணர் தெரிவிப்பார். வெற்றி பெற்ற அப்பாவுக்கு 6 பாட்டில் பியர், மகளுக்கு ஒரு பை நிறைய தலை அலங்காரப் பொருட்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. ’’’பின்னல்கள் மிகவும் சவாலானவை. அதிலும் குதிரைவால் போடுவதற்குள் திணறிவிட்டேன்’’ என்கிறார் ஓர் அப்பா.

அடடா! அப்பா மகளுக்கு தலை பின்ன ஆரம்பித்துவிட்டால் அம்மாவுக்கு டென்ஷன் குறையுமே!

மரபணு குறைபாடு மூலம் வரும் நோய்களில் ஒன்று ஸிரோடெர்மா பிக்மெண்டோசம். சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்களின் தாக்கத்தால் தோல் மோசமாகப் பாதிக்கப்படுகிற நோய். பிரேஸிலின் ட்ஜல்மா ஜார்டின் என்ற கிராமம் முழுவதும் இந்த நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இங்கே வசிக்கும் 800 பேரில் 600 பேருக்குப் பாதிப்பு இருக்கிறது. புறஊதாக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக, வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுகின்றனர். இந்த நோய் தோல் புற்றுநோயாக நாளடைவில் மாறிவிடுகிறது.

’’ஒருநாள் காலை எழுந்தபோது சிறிய அளவில் பாதிப்பு தெரிந்தது. அடுத்த இரண்டே நாட்களில் மிக வேகமாக வளர்ந்து மோசமான சேதத்தை உண்டாக்கிவிட்டது. இன்று வரை அதன் வேகத்தைக் குறைக்கவே முடியவில்லை. என் சகோதரர்களும் சகோதரியும் தற்போது பாதிக்கப்பட்டிருக்கின்றனர்’’ என்கிறார் ஜார்டின். தற்போதைய நிலையில் குணப்படுத்த முடியாத நோயாக இருப்பதால், வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். இந்த நோய் குறித்த விழிப்புணர்வை சில தொண்டு அமைப்புகள் ஏற்படுத்தி வருகின்றன.

ஐயோ… எவ்வளவு மோசமான நோய்…

டெக்சாஸ் தொழிற்சாலையில் வெல்டராக இருக்கிறார் ஸ்காட் ராப். தன்னுடைய வேலையையே கலையாக மாற்றி வருகிறார். இரண்டு உலோகக் குழாய்களை இணைக்கும் அலுப்பூட்டும் பணியைத் தானும் ரசித்து, மற்றவர்களையும் ரசிக்க வைத்துவிடுகிறார் ஸ்காட். ‘’நான் ஒன்றும் என் நிபுணத்துவத்தைக் காட்ட பல டிசைன்களில் வெல்டிங் செய்வதில்லை. சாதாரணமாக வெல்டிங் செய்யப்பட்ட குழாய்களைப் பார்ப்பதில் சுவாரசியம் இல்லை.

அதனால் இப்படிச் செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் என வானவில் வண்ணங்களிலும் டிசைன்களிலும் குழாய்கள் அட்டகாசமாகவே இருக்கின்றன. எந்த வேலையையும் நமக்கு ஏற்றவாறு சுவாரசியம் கூட்டிக்கொள்வதில்தான் நமது திறமையே இருக்கிறது’’ என்கிறார் ஸ்காட்.

சரியா சொன்னீங்க ஸ்காட்!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x